வருக வணக்கம்

Wednesday, February 18, 2009

போலீஸ் துரத்தல்.. கார் சேஸ்.. தப்பிய சீமான்!


புதுச்சேரி மாணவர்களுடன் சீமான்


நெல்லை: தன்னைக் கைது செய்ய காத்திருந்த போலீசாரிடம் இருந்து தப்பிய சீமான், காரில் ஏறிப் பறந்தார். அவரது காரை போலீசார் விரட்டிச் சென்று மடக்கியபோது அதில் சீமான் இல்லை. போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மாயமாகிவிட்டார்.

புதுச்சேரியில் நடந்த ஈழத் தமிழர்கள் ஆதரவு கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக இயக்குனர் சீமான் மீது புதுச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய முயன்று வருகின்றனர்.

ஆனால், அவர்களிடம் சிக்காமல் சாதுர்யமாக தப்பி வரும் சீமான் நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நேற்றிரவு நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ரகசியமாக நெல்லை வந்தார்.

அவர் எங்கு இருக்கிறார் என்று தமிழக போலீசே கண்டுபிடிக்க முடியாதபடி அவரது இருப்பிடம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

கூட்டம் தொடங்கும் வரை சீமான் வருவாரா என்பதே சந்தேகமாக இருந்தது. ஆனால், குறிப்பிட்டபடி வக்கீல்கள் புடைசூழ பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார் சீமான்.

இது குறித்து தமிழக போலீசார் புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தரவே அவர்கள் சீமானை கைது செய்ய நெல்லை போலீசாரின் உதவியை கேட்டனர். இதையடுத்து பொதுக் கூட்டம் முடிந்ததும் அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கூட்டம் நடத்தி முடிக்க இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் கடந்து 10.30 மணிக்கு பிறகும் கூட்டம் தொடர்ந்தது. இதனால் கூட்டத்தை உடனே முடிக்கச் சொல்லி வழக்கற்ஞர்களை போலீசார் நெருக்கினர்.

ஆனால், கூட்டம் முடிந்ததும் சீமானை கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதை அறிந்த வழக்கறிஞர்கள் சீமானை தப்பவைக்க முடிவு செய்தனர்.

பொதுக்கூட்ட மேடை அருகே 3 கார்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. கூட்டம் முடிந்ததும் வக்கீல்கள் மேடையை சுற்றி நின்று கொண்டனர். போலீசார் மேடைக்கு வர முடியாதபடி தடுப்பை ஏற்படுத்தினர்.

டைரக்டர் சீமான் காரில் ஏறியதும் 3 கார்களும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டன. இதில் சீமான் எந்தக் காரில் ஏறினார் என்பதைக் கூட போலீசார் பார்க்க முடியவில்லை.

இதை எதிர்பாராத போலீசார் சுதாரித்துக் கொண்டு 3 கார்களையும் 'சேஸ்' செய்தனர்.
ஆனால், பாளை பஸ் நிலையம், அங்கிருந்து புது பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, வண்ணார்பேட்டை, டவுன் என்று சென்ற அந்த கார்கள் குற்றாலம் ரோட்டில் சென்றவுடன் தனித்தனியாக பிரிந்து ஒவ்வொரு காரும் வெவ்வேறு திசையில் சென்றன.

இதில் தடுமாறிய போலீசார் ஒரு காரை பின் தொடர்ந்து குற்றாலம் வரை சென்றனர். மற்ற கார்களைப் பற்றி செக் போஸ்டுகளுக்கு தகவல் கொடுத்தனர். குற்றாலம் சென்ற காரை போலீசார் மடக்கி சோதனையிட்டபோது அதில் சீமான் இல்லை.

அதே போல மற்ற இரு கார்களையும் போலீஸ் சோதனைச் சாவடிகளில் சோதனையிட்டபோது அவற்றிலும் சீமான் இல்லை. அவர் வழியிலேயே வேறு காருக்கு மாறி எங்கோ போய்விட்டார்.

இந்தக் கூத்து நள்ளிரவு 3 மணி வரை நடந்தது.

தற்போது அவர் மதுரையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நன்றி:
http://thatstamil.oneindia.in/news/2009/02/18/tn-how-seeman-escaped-from-polic.html

No comments:

சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

மனதை மயக்கும் பழையபாடல்