வருக வணக்கம்

Wednesday, February 18, 2009

'புலிகள்': பிரணாப் பேச்சு-தமிழக எம்.பிக்கள் கொந்தளிப்பு; லோக்சபா ஸ்தம்பிப்பு!


- photo file copy

டெல்லி: இலங்கைப் பிரச்சினைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது என்று லோக்சபாவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அறிவித்தார். இதையடுத்து கோபமடைந்த பாமக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இருமுறை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பாக பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு, தாங்கள் பிடித்து வைத்துள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இலங்கையில் சண்டை ஓய்ந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரப்பகிர்வு அமல்படுத்தப்படவும், அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா உதவும்.

இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தம் முழு அளவில் அமல்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும். அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வு ஏற்படும்.

வடக்கு மாகாணத்தில் அமைதி திரும்ப அரசியல் சந்தர்ப்பம் இருப்பதாகவே இந்தியா கருதுகிறது. 13வது அரசியல் சட்டத் திருத்தம் இதற்கு முக்கியமானது. வடக்கு மாகாணத்தின் மறு சீரமைப்புக்கும், மறு வாழ்வுக்கும் இந்தியா உதவத் தயாராகவே உள்ளது.

இலங்கையில் அமைதி நிலவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் தொடர்ந்து இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.

இந்தியா மத்தியஸ்தம் செய்யாது

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இந்தியா மத்தியஸ்தம் செய்யவே செய்யாது. அதற்கான வாய்ப்பே இல்லை என்றார் பிரணாப் முகர்ஜி.

இதைக் கேட்டதும் பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் எழுந்து பிரணாப் பேச்சு திருப்தி தரவில்லை என்று கூறி அதிருப்தியை வெளியிட்டு, உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.

அவர்களை அமருமாறு கூறிய லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றால் தனியாக நோட்டீஸ் தருமாறு கூறினார். ஆனால் அதை ஏற்காமல் தொடர்ந்து பாமக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் கோஷமிட்டபடி இருந்ததால் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் சிறிது நேரம் கழித்து சபை மீண்டும் கூடியது. கூட்டத்தை துணைத் தலைவர் நடத்தினார். அப்போது பாமக எம்.பிக்கள், சபாநாயகர் இருக்கை முன்பு திரண்டு கோஷமிட்டனர்.

பத்திரிக்கை செய்திகளை காட்டி இலங்கையில் இனப்படுகொலை நடந்து வருகிறது. அதை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.

இதனால் மீண்டும் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

நன்றி: தட்ஸ்தமிழ்

No comments:

சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

மனதை மயக்கும் பழையபாடல்