வருக வணக்கம்

Sunday, December 21, 2008

உற்சாக வரவேற்பு

டெல்லியில் இருந்து அனைத்து கட்சிகள் புதுவை திருப்பினார்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..Wednesday, December 17, 2008

ஈழத்தமிழரைக்காக்க புதுச்சேரி தமிழுணர்வாளர்கள் தில்லியில் தலைவர்களுடன் சந்திப்பு
டில்லி சென்ற புதுச்சேரி அரசியல் கட்சி, இயக்கத் தலைவர்கள் அங்குள்ள பல்வேறு தேசிய கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன், செயலர் ப.அமுதவன், மறுமலர்ச்சி தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர் வ.செல்வராசு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் கோ.சுந்தரமூர்த்தி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயலாளர் யூ.முத்து, லோக் ஜனசக்தி தலைவர் சி.எம்.புரட்சிவேந்தன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகச் செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ ஆகியோர் டில்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்கள், தேசிய கட்சித் தலைவர்களை சந்தித்து இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 16-ந் தேதியன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலர் பிஸ்வாஸ் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இச்சந்திப்பின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடம் நேரில் பேசுவதாக கூறினார். லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் தங்கள் கட்சி இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும், தமிழர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலர் பிஸ்வாஸ் தான் விரைவில் இலங்கைச் சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்து தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக உறுதிபட கூறினார்.
மேலும், புதுச்சேரி கட்சி, இயக்கத்தினர் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கடந்த 15-ந் தேதியன்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியை நேரில் சந்தித்து மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

- நன்றி பெரியார் பாசறை

Monday, December 15, 2008

ஈழம் - அறிய வேண்டிய உண்மைகள் - முழு நூல் படிக்க....
தமிழீழப் புரட்சியும் தமிழின மீட்சியும்
மன்னர் ஆட்சி, பார்ப்பன மேலாதிக்கம், அறியாமை இருள், சாதிய, பெண்ணிய ஒடுக்குமுறை, நிலவுடைமை முதலாளியச்சுரண்டல், வெள்ளை ஏகாதிபத்திய அடக்குமுறை, இந்தி வடநாட்டானின் ஆதிக்கச் சூழ்ச்சிவலை, சிங்கள இனவெறித்தாக்குதல் என மனிதத்துவத்தை மறுக்கும் பல்வேறு காலச்சூழல் காரணிகளால் தொடர்ந்து பிழியப்பட்டு வருவதே தமிழர்களின் இன்று வரையிலான அவல வரலாறாகும்.
இத்தகு மோசமான நொறுக்குதல்களுக்கு ஆட்பட்டுவரும் நம் இன வரலாற்றில் இப்போது நடந்து கொண்டிருப்பதுதான், இந்நாள்வரை நம் இனம் கண்டிராத மிக முக்கிய காலக்கட்டமெனக் கருத வேண்டியுள்ளது. இதற்குக் கருவென வித்திட்டது தமிழீழ விடுதலைப் போராட்ட மறவர்களின் உயிர்த் தியாகமும் அதையொட்டிய உலகளாவிய எழுச்சியுமேயாகும்.
அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூற்றுக் காலந்தொட்டே தமிழ் மரபினர் வீரஞ்செறிந்த பல போர்களைக் கண்டு வென்றவர்களே என்னும் போதிலும், அதில் எதுவுமே மக்களின் விடுதலைப் போராட்டமாக பரிணமித்ததில்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், மனித குலம் இன்று – அறிவியல், மருத்துவ, தொழில்நுட்ப வேகவளர்ச்சி, பொதுவுடைமை தத்துவ தரிசனம் என நாகரிகத்தின் உச்சத்தைக் கண்டு கொண்டுவிட்டிருக்கும் இவ்வரியதொரு காலச்சூழலில் தமிழின விடியலுக்கானப் போராட்டமானது தமிழீழத்தில் மிகுந்த அர்ப்பணிப்போடு முன்னேற்றமடைந்து வருகின்றது என்பதான செய்தி, உலகம் முழுவதும் உள்ள தமிழர் அனைவருக்கும் பெருமகிழ்வையும் நம்பிக்கையையும் தருவதாய் உள்ளது. அதோடு இதில் தமிழர்களின் புறநிலை அடிமை விலங்குகளான சாதியும் பெண்ணடிமைத் தனமும்கூட ஒரு முன்னுதாரணமாய் இப்போராட்ட வரலாற்றினூடே பெருமளவிற்கு ஒழிக்கப்பட்டு வருவதானச் செய்தி, இதில் நம் இனம் ஒரு முழு விடுதலையை நோக்கியே பயணம் செய்கிறது என்பதை உறுதி செய்யும் அடையாளமேயாகும். மேலொரு சிறப்பாக அது தாய்மொழி மீட்புப் போராகவும் உருப்பெற்றிருப்பது நம்மினம் முழுமைக்கும் மிகப்பெரும் பலமாகும். இதில் அப்பயணத்தின் வெற்றி இலக்காகக் குறிக்கப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலையின் வரலாற்றுத் தேவையையும், அப்போராட்டத்தின் நியாயங்களையும் இன்று உலகினருக்கு எடுத்துச் செல்ல வேண்டியது தமிழர் நம் அனைவரின் இன்றியமையாக் கடமையாகிறது. எனவே ஈழத்தமிழரின் விடுதலை வரலாற்றை அறிந்து கொள்வதும், பரப்புவதுமான அத்தலையாயப் பணியை காலந்தாழாது செயலாற்ற அணிதிரள்வோம் வாரீர் தமிழர்களே!

ஈழம் - தமிழர் பூர்வீகத்தாய் மண்
உலகின் முதல் மாந்தன் தோன்றியது குமரிக்கண்டமே என்றும், முதல்மொழி தமிழே என்பதுமே இதுநாள்வரையான உலகாய்வுகள் கூறும் முடிவு. தமிழகமும் இலங்கையும் சேர்ந்திருந்த நிலப்பகுதிக்கே “குமரிக்கண்டம்” என்ற பெயர் வழங்கிற்று. குமரிக்கண்டத்தைக் கடல் கொண்ட போதோ அல்லது கண்டங்கள் பிரிந்து பிளவுண்ட போதோ, இலங்கை தனித்தீவாகத் துண்டிக்கப்பட்டது.
“இலங்கை” என்ற பெயர் தமிழ்ப் பொருள் சுட்டும் படியாய், தமிழன் சூட்டிய பெயரேயாகும். அந்நாளில் நீண்ட நெடுந்தூர அயலகக் கடற்பயணம் பன்முறை மேற்கொண்ட தமிழ்நாட்டுத்தமிழர்கள், தாங்கள் நாடு திரும்புகையில் தம் நிலத்துக்கு அருகிலுள்ள இப்பெருந்தீவே ஓர் அடையாளக் குறியாய் விளங்கியதால்..“இல்” என்பது ‘ஒளி’இ ‘குறி’ என்றவாறான பொருளடிப்படையில் இல் + அங்கு ஸ்ரீ இலங்கு என்ற பொருள்பட பெயர் வழங்கினர்.“ஈழம்” என்ற மற்றொரு பெயரும் தமிழ்ப் பொருள்படும் படியானதே. இத்தீவில் தங்கம் அதிகமாகக் கிடைத்ததனாலேயே “ஈழம்” எனப் பெயர்பெற்றது. ஈழம் என்ற தமிழ்ச் சொல்லிற்கு “பொன்” என்றே பொருள். அதையொட்டி ஈழத்தில் வாழ்ந்தவர்கள் ஈழர் என அழைக்கப்பட்டனர். ஈழர்கள் எனப்படும் தமிழரே அத்தீவின் தொல்குடி மரபினர் என்பதற்குச் சிலப்பதிகாரம் மற்றும் புறநானூற்றில் பல சான்றுகள் உள்ளன.


சிங்களர் நுழைவு
ஈழத்தமிழர்கள் ஆயிரமாண்டுகளாக வாழ்ந்துவந்த தாய்மண்ணில்தான் சிங்களவர்கள் புதியதாய் திடுமென நுழைந்தனர். இதை சிங்களவர்களின் வரலாற்று நூலான “மகாவம்ச”மே குறிப்பிடுகிறது. கி.மு.5ஆம் நூற்றாண்டில் இன்றைய இந்தியாவின் ஒரிசா பகுதியில் அன்று “துட்டகாரா” என்றழைக்கப்பட்ட நிலத்தை ஆண்டுவந்தவன் ஆரியவழி மன்னனான “சிங்கபாகு” – அவனின் மகனான விஜயன், தன் சொந்த நாட்;டு மக்களுக்கே இன்னல் விளைத்துக்கொண்டு பெருங்கேடாளனாய் வளர்ந்து வந்தான். அத்தொல்லை தாங்க முடியா மக்கள் மன்னனிடம் முறையிடவே, விஜயனும் அவனொத்த கூட்டத்தினர் 700 பேரும் மூன்று மரக்கலங்களில் ஏற்றி நாடு கடத்தப்பட்டனர். அக்கப்பல்கள் கடைசியாய் இலங்கைத் தீவில் கரையொதுங்கவே, அக்கூட்டத்தினர் அங்கேயே அடைக்கலமாயினர். பின் அப்பகுதிவாழ் பழங்குடி பெண்களை மணம்முடித்து புதிய இனக்குழுவாயினர்.
இவ்வரலாற்றை உறுதிசெய்யும் வகையில் 1983-ல் சிங்கள அரசே, விஜயனின் இலங்கை வருகைக் கொண்டாட்ட 2500ஆம் ஆண்டு நிறைவு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டு, சிங்களர்கள் இலங்கைத் தீவிற்கு வந்தேறிகளே என்பதைப்பதிவு செய்துள்ளது.சிங்களச் சூழ்ச்சியும் தமிழ்ப் பேரரசு வீழ்ச்சியும்

சிங்களவர்கள் இலங்கை மண்ணுக்கு புதிதாய் வருகை தந்தவர்களே என்றபோதும்கூட, நம் தமிழ் மக்களும், மன்னர்களும் அவர்களை அரவணைப்புடனேயே நடத்தினர். தொடக்கக் காலங்களில் அமைதி காத்துவந்த சிங்களர்கள் காலப்போக்கில் தங்கள் மக்கட்தொகைப் பெருக்கத்தின் அடிப்படைத் துணிவில் நம் தமிழ்ச் சிற்றரசர்களுடன் ஆங்காங்கே சில மோதல்களைத் தொடங்கினர். ஆனாலும், அவர்களால், இலங்கைக்கு வந்த முதல் 350 ஆண்டுவரை எந்த ஒரு பரந்த நிலப்பரப்பையும் கைக்கொள்ள முடிந்ததில்லை.

இக்காலக்கட்டத்தில்தான் அனுராதபுரம் கோட்டையைத் தலைநகராகக் கொண்டு எல்லாளன் (அ) ஏலேலசிங்கன் என்றழைக்கப்பட்ட தமிழ்ப்பேரரசன் 32 தலைமை வாய்ந்த கோட்டைகளை நாடெங்கும் கட்டி மக்கள் மகிழும்படி 45 ஆண்டுகாலம் தொடர்ந்த பொற்கால ஆட்சி (கி.மு.205-161) புரிந்து வந்தான். இதே காலக்கட்டத்தில் சிங்கள மன்னன் “காகவனதீசன்” மகனான “துட்டகாமினி” என்பவன் சிறுவயதுமுதலே தமிழர்கள் மீது பெருவெறுப்புக் கொண்டு வளர்ந்து வந்தான். இவன் தன் தந்தையின் எதிர்ப்பையும் மீறி தமிழர்கள்மேல் போரிடத் துணிந்தான்.
தமிழ்ச்சிற்றரசர்கள் பலரையும் ஒவ்வொருவராக வீழ்த்தி பெரும்படை திரட்டி வந்த காமினி கடைசியில் நம்தமிழ்ப்பேரரசன் ஏலேலசிங்கனையும் வீழ்த்தும் முயற்சியில் இறங்கினான். ஆனால் காமினி, மகாபலிகங்கை ஆற்றைக் கடந்து உள் நுழைய முடியாவண்ணம் ஏலேலனின் படைவீரர்கள் அரணமைத்திருந்தனர். 4 மாதமாகியும் ஆற்றைக் கடக்க முடியாதிருந்த காமினி, தன் சொந்தத் தாயார் விகாரதேவியுடன் பெண்களை அனுப்பி எதிரணியின் தளபதிகள் சிலரை மயக்கி சூழ்ச்சியால் ஆற்றைக் கடப்பதில் வெற்றி பெற்றான்.

மேலும் காமினி இதில், “ஏலேலனை எதிர்த்து நடக்கும் போர் வெறும் அரசியல் போர் மட்டுமன்று, இது இலங்கை நாட்டில் புத்த மதத்தைக் காப்பாற்றுவதற்காக நடக்கும் தெய்வப்போர், புனிதப்போர்” எனக்கூறி ஒட்டுமொத்தச் சிங்களவர்களையும் ஓரணியாக்கி முன்னேறினான். ஆனாலும் ஏலேலனின் கோட்டைகளையும் அகழிகளையும் நெருங்கமுடியாது மேலும் நான்கு மாதம் முற்றுகை நீடித்தபோது, காமினி குறுக்கு வழியில் கையூட்டுகளைத் தந்து தமிழ்ப்படைத் தளபதிகள் பலரை தம் படையில் இணைத்தபின்பே அனுராதபுரத்தை காமினியின் படைகள் நெருங்க முடிந்தது. அப்போதும் ஏலேலனின் தளபதி “திகஜந்து” கடுமையாக எதிர்த்துப் போரிட்டே மாண்டான். இந்நிலை பற்றி தமிழ்நாட்டிலிருந்த திகஜந்துவின் மருமகன் “பல்லூக்காவிற்கு” ஒற்றர்வழி செய்தி அனுப்பப்பட்டது.
இறுதியில் ஏலேலனின் கோட்டையை நெருங்கிவிட்ட காமினியின் படையை எதிர்த்து ஏலேலன் தானே களத்தில் நின்று போரிட்டு கடைசிப் படையை நடத்தினான்.
முடிவில் ஏலேலனை காமினி ஒற்றைக்கு ஒற்றை சண்டையிடுமாறு அறைகூவினான். 45 ஆண்டுகள் ஆண்டு முதுமையடைந்திருந்த ஏலேலன் இளைஞன் காமினியோடு யானை மீது அமர்ந்து கடும் போர் புரிந்தான். பல மணிநேர வீரஞ்செறிந்த போருக்குப்பின் தமிழ் மன்னன் ஏலேலன் காமினியால் கொல்லப்பட்டான். இதனிடையே தமிழகத்திலிருந்து பல்லூக்கா தலைமையில் உதவிக்கு வந்த 60 ஆயிரம் தமிழ் வீரர்களைக் கொண்ட படை, ஏலேலன் இறந்து 7 நாள் தாமதமாகவே வந்து சேர முடிந்தது. தமிழர்களின் பேரன்பைப் பெற்றிருந்த அப்போர் மறவனான ஏலேலனை காக்க முடியாதுபோன ஆற்றாமையைச் சொல்லும் பாடலாகவே “ஏலேல, ஐலசா” என்னும் மீனவ நாட்டுப்புற கதைப்பாடல் உருப்பெற்றதோடு, நாம் நேர் செய்ய வேண்டிய வரலாற்றுக் கடமையை சேர்த்தே இன்றும் அது குறித்து நிற்கிறது.

வெள்ளையர்கள் ஆதிக்கம்

தமிழர் சிங்களர் பகைமையும், தமிழ்சிங்கள அரசுகளுடனானப் போராட்டமும் இலங்கை வரலாற்றோடு நாளும் தொடர்ந்து கொண்டிருந்தபோதும், வெள்ளையன் வருகைவரை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணம் முழுவதும், வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் சில பகுதிகளிலும் தமிழர் ஆட்சியே இருந்துவந்தது. மேலும் கண்டி மண்ணில் தமிழரசே இருந்தது. மேற்குப் பகுதிகளில் மட்டுமே சிங்கள அரசு இருந்து வந்தது.

இந்நிலையில் கி.பி.1505-ல் போர்ச்சுக்கீசியர்கள் முதல் முதலாக இலங்கையில் நுழைந்தனர், தொடக்கத்தில் மேற்கிலிருந்த சிங்கள அரசோடு சில வியாபார உடன்படிக்கைகள் மட்டுமே செய்துகொள்ளும் விதமாய் காலூன்றிய அவர்கள் பின்னர் அங்கு நிலவிய உள்நாட்டு அரசியல் நிலையற்றத் தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் நவீன இராணுவப் போர்க்கருவிகளின் துணையோடு சிறுகச் சிறுக இலங்கையைக் கைப்பற்றத் தொடங்கினர். அப்போது ஈழத்தை ஆண்ட தமிழ் மன்னனான சங்கிலியன் இறுதிவரை அவர்களுக்கு அடிபணிய மறுத்துப் போராடிவந்தான். கடைசியில் சங்கிலியனைச் சிறைபிடித்த போர்ச்சுக்கீசியர்கள், அவனை கோவாவிற்கு கொண்டுபோய் சிறையடைப்பதாகச் சொல்லி தூக்கில் போட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து மொத்தம் 177 ஆண்டுகாலம் அவர்களின் அதிகாரம் பரவி இருந்தது.

போர்ச்சுக்கீசியர்களை அடுத்து வந்த டச்சுக்காரர்கள் அன்றைய கண்டியரசுனுடன் சேர்ந்து போர்ச்சுக்கீசியரை விரட்டத் துணை புரிவதாகவும், பின் அதற்கெனத் தங்களுக்குச் சில வியாபார உடன்படிக்கை ஏற்படுத்தித் தர வேண்டுமெனவும் கோரினர்.
அதன் படி கி.பி.1659இல் போர்ச்சுக்கீசியர் இலங்கையை விட்டு துரத்தப்பட்டனர். ஆனால் இறுதியில், வென்ற பகுதிகளைக் கண்டியரசனை ஏமாற்றி டச்சுக்காரர்களே தங்கள் வசமாக்கிக்கொண்டு 112 ஆண்டுகளும் பின் கடைசியாய் வந்த பிரிட்டிஷ்காரர்கள் 112 ஆண்டுமாக ஈழத்தின் செல்வங்கள் அனைத்தையும் சுரண்டினர்.

வெள்ளையர்களின் ஒவ்வொருமுறை ஆக்கிரமிப்புப் போரின் போதும் அவர்களைக் கடைசிவரை வீரத்துடன் எதிர்த்துப் போராடியது தமிழ் நில மன்னர்களே ஆவர். பிரிட்டிஷாரிடம் பெரும் எதிர்ப்பின்றி சிங்களப் பகுதிகள் எல்லாம் சரணடைந்த பின்பும்கூட, பண்டார வன்னியன் என்னும் தமிழ் மாவீரன் மட்டுமே வரலாற்றில் ஆங்கிலேயனை எதிர்த்து வெற்றி கொண்டவனாகவிளங்குகிறான். 25.08.1803ல் முல்லைத்தீவில் அமைந்திருந்த ஆங்கிலேயக் கோட்டையை வெற்றி கொண்டு 30 ஆண்டுகள் வரை ஆங்கிலேயனை எதிர்த்துத் தனி அரசு நடத்தியும் சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்து வந்தான். ஆனால் காக்கை வன்னியன் என்னும் தமிழனாலேயே கடைசியில் காட்டிக்கொடுக்கப்பட்டு ஒரு நாள் தனிமையில் செல்லும்போது பண்டார வன்னியன் கொலை செய்யப்பட்டான்.அதன்பிறகு இலங்கையைத் தன் முழு ஆளுகைக்குக்கொண்டுவந்த பிரிட்டிஷார் அவர்களின் நிர்வாக வசதிக்கெனவே தனித்தனியாய் இயங்கிவந்த தமிழர் சிங்களர் பகுதிகள் அனைத்தையும் கி.பி.1833ல் முதன்முதலாக ஒன்றிணைத்து மையப்படுத்தப்பட்ட, ஒற்றைஆட்சி முறையை அமுல்படுத்தினர்.


இலங்கையைச் செழிப்பாக்கிய தமிழ்நாட்டுத்தமிழர் குருதி
இலங்கை முழுவதையும் தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பிரிட்டிஷார், அந்நாட்டின் மலையகச் செல்வவளம் முழுவதையும் அறுவடை செய்ய முடிவு செய்தனர். பண்படுத்தப்படாதிருந்த அம் மலைகளைச் சீர்செய்ய, பயிரிட பெரும் உழைப்புத் தொழிலாளர்கள் தேவையாயிருந்தனர். அன்றைய ஈழத்தின் பூர்வகுடிகளாக இருந்த தமிழர்களோ,பெரும் பகுதியினர் படித்தவர்களாகவும், தமிழையும், சைவத்தையும் போற்றும் சாதித் தமிழர்களாகவும், நிலவுடைமையாளர்களாகவும் இருந்ததால் அவர்களை அம் மலையக வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வழியின்றிப் போனது. சிங்களர்களோ, படிப்பில் நாட்டமற்றவர்களாகவும், உழைப்பிற்கு அஞ்சுகிற சோம்பேறிகளாகவும், மேலும் கட்டாயப்படுத்தினால் புத்தத் துறவிகளாக மாறி, தப்பி சுக வாழ்வு வாழவும் பழகிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தங்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்தே தொழிலாளர்களைத் தருவிக்க வேண்டிய நிலைக்கு வந்த வெள்ளையன், அன்றைய நம் தென்தமிழ்நாட்டில் செயற்கை பஞ்சங்களையும், சாதிக் கலவரங்களையும் ஏற்படுத்தி, இங்கிருந்த நம் தமிழர்களிடம் நல்ல கூலி தருவதாகக்கூறி, கி.பி.1800 லிருந்து படிப்படியாக 10 இலட்சம் பேர்வரை இட்டுச்சென்று அங்கே நிரந்தரக் குடியமர்த்தினான்.
மலையகத்தமிழர்கள் என்றழைக்கப்படும் அவர்களில் பெரும் பகுதியினர் தமிழ்நாட்டுச் சூத்திர உழைப்பாளர் வகுப்பினர்களான பள்ளர், பறையர், மூக்குவர், மீனவர், முக்குலத்தோர், நாடார், சாணார், வன்னியர், மருத்துவர் வேளாளர், கவுண்டர் சாதிப்பிரிவினர்களேயாவர். மேலும் ஆந்திரா, கேரளா, கர்நாடகப் பகுதியிலிருந்தும் தொழிலாளர்கள் தருவிக்கப்பட்டபோதும், இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்;களில் 95 சதவீதம் பேர் இன்றும் தமிழர் தொகையினரே.
இத்தமிழர்களின் உழைப்பைக் கொண்டே மொத்த இலங்கை நாட்டின் அனைத்துப் பகுதிக்குமான தரைவழிச்சாலை, இரயில்வே தண்டவாளம், பாலங்கள், நீர்த்தேக்கங்கள், தொடர்வண்டி நிலையங்கள், துறைமுகங்கள் அனைத்தும் கட்டியெழுப்பப்பட்டது.

இவர்களின் ஓய்வற்ற வியர்வையால் முதல் 70 ஆண்டுகளுக்குள் அங்கே 2,70,000 ஏக்கர் நிலப்பரப்பில் காப்பியும் இரப்பரும் செழிக்கத் தொடங்கியது. உலகில் மிகப்பெரும் வியாபார மதிப்பைப் பெற்றிருந்த பச்சைத்தங்கம் என்றழைக்கப்பட்ட இலங்கைத்தேயிலையை, 38 கோடி கிலோ அளவுக்கு சாகுபடி செய்திட நம் தமிழகத் தமிழர்களின் குருதியே எருவானது. ஒவ்வோர் அறுவடைக்கால உழைப்பிற்கும் தமிழ்நாட்டிலிருந்து 10 இலட்சம் தமிழர்கள் தொடர்ந்து போவதும் வருவதுமாயிருந்தனர். இத்தகு பயணக்காலப் பொழுதுகளில் 3 இலட்சம் தமிழர்கள் செத்தொழிந்திருக்கின்றனர்.

இவ்வாறாக இன்றைய இலங்கையின் நிரந்தர பெருவருவாய்க்கு 200 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களின் குருதியையும் வியர்வையையும் சிந்திவரும், இன்று 15 இலட்சம் மக்களாக இருக்கும் அம்மலையகத் தமிழர்களைத்தான், இலங்கை அரசு நாடற்றவர்கள் என்று இழிவுபடுத்துவதோடு அவர்கள் அனைவரும் விரைவில் இந்தியாவுக்கே திரும்பிட வேண்டுமென்றும் நிர்பந்தித்து வருகிறது.


சுதந்திரமும் - தந்திரமும்
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான அரசியல் சூழல் மாற்றத்தில் பிரிட்டிஷார் தங்களின் காலனியாதிக்க நாடுகளுக்கு, சுதந்திரம் தர வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாயிருந்தனர். ஆனாலும் அதற்கு முன்பே இந்தியாவைப் போல் இலங்கையிலும் சுதந்திரப் போராட்டக்களம் தீவிரமடைந்திருந்தது. அப்போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதில் சிங்களவரைக் காட்டிலும் தமிழர்களின் பங்கே அளப்பரியதாகும்.
இலங்கை விடுதலை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருந்த “டெனாமூர்” ஆணைக்குழுவிடம் (1927-1931) தமிழர்கள் முன் வைத்த விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ உரிமை முழக்கம் வெற்றிபெற முடியாது போனது. கடைசியில் 04.02.1948-இல் ஒன்றுபட்ட இலங்கையின் சுதந்திரம் நியாயமற்ற முறையில் சிங்களவரின் அதிகாரத்திற்கு அளிக்கப்பட்டுவிட்டது. சிங்களர் ஆட்சிக்கு வந்த 8ஆம் மாதமே, இலங்கையைச் செல்வ வளமாக்கிய 10 இலட்சம் மலையகத்தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து 15.11.1948இல் அவர்கள் அனைவரையும் நாடற்றவர்கள் என அறிவித்தனர். பின்பு படிப்படியாக 05.06.1956ல் அரசியலமைப்பில் சிங்களமே ஒரே ஆட்சிமொழி எனவும், 1970இல் கல்வியைத் தரப்படுத்தல் எனக்கூறி தமிழ் மாணவர்களின் மேற்படிப்பிற்குத் தடைகளையும் ஏற்படுத்தினர். 22.05.1972இல் பௌத்தமே முகாமை பெற்ற அரசமதம் என்று ஆணை நிறைவேற்றி முடித்தனர். இப்படியே தொடர்ந்து தமிழர்களின் அனைத்து உரிமைகளும் புறக்கணிக்கப்பட்டுவிட்ட நிலையில், இனி சிங்களவனோடு சேர்ந்துவாழ முடியாது என்ற நிலைக்குத் தமிழர்கள் வந்தபோது: தனி நாடு கோருவது அரசியலமைப்புக்கே எதிரானது என மேலும் ஒரு சட்டத்தை 1979இல் கொண்டுவந்து தமிழின எதிர்காலத்திற்கான அனைத்துக் கதவுகளையும் அடைத்தனர்.

இலங்கையின் மொத்த மக்கள் தொகையான 150 இலட்சத்தில் 50சதவீதம் சிங்களவர்களாக 75 இலட்சம் பேரும், 50சதவீதம் தமிழர்களில் 45 இலட்சம் ஈழத்தமிழர்களாகவும், 15 இலட்சம் இலங்கை மலையகத்தமிழர்களாகவும், 15 இலட்சம் இசுலாமியத் தமிழர்களாகவும்; உள்ளனர். இச்சரிபாதியாய் உள்ள தமிழர் தொகையை சிதைக்கும் நோக்கோடே முதலில் மலையகத்தமிழர்களின் உரிமையைப் பறித்தனர். அதோடு இசுலாமியத் தமிழர்களின் மீது தாக்குதல் நடத்திவிட்டு அப்பழியை அப்பாவி ஈழத்தமிழர்களின் மீது திசை திருப்பிக் குழப்பத்தையும் உட்பகையையும் ஏற்படுத்தினர். 45 இலட்சமான ஈழத்தமிழர்களின் மீது இராணுவ, காவல்துறை சிங்களக் காடையர்கள் என மும்முனைத்தாக்குதலை ஏவி அதில் 10 லட்சம் பேருக்கு மேலானவர்களை அகதிகளாய் துரத்தியடித்து வெளியேற்றினர். இவ்வழியே இறுதியில் இன்று தமிழர் தொகை பெருமளவிற்குத் தாழ்த்தப்பட்டது.
இதன்மூலம் இலங்கை நாடாளுமன்றத்திலும் தமிழர்களின் எண்ணிக்கை பலம் என்பது திட்டமிட்டபடி சுருக்கப்பட்டதால், தமிழர் துணையின்றியே இலங்கையில் சிங்களர் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு தமிழ்ப்பிரதித்துவத்தின் குரல் முற்றுமாய் ஒடுக்கப்பட்டுவிட்டது.

புதைகுழிக்குப்போன புத்தமும் தமிழினப் படுகொலையும்.
அடிப்படையில் தங்களுக்கென ஒரு பண்பாட்டு வரலாறோ, சீர்மை பெற்ற மொழியோ, இலக்கியமோ, வாழ்வியல் நெறியோ ஏதுமற்றிருந்த சிங்களர்கள், அன்றைக்குப் புதிதாய் பரவிவந்த புத்த மதத்தின் வழியே தங்களுக்கென ஒரு முகவரியை, ஏற்படுத்திக் கொள்ளளாயினர். புத்தர் மறைந்து 200 ஆண்டு காலத்திற்குப் பிறகு கலிங்கத்து அசோக மன்னனின் முயற்சியில், கி.மு.3ஆம் நூற்றாண்டில் அதுவும் தமிழ்த் துறவிகளான புத்தமித்ரர், கணதாசர், மகாதேரர், தர்மபாலர் போன்றோர் வழியே புத்தமதம் இலங்கைத் தீவிற்குப் பரவியது என்பதே வரலாறு.
ஆனால் இதை மறைக்கும் விதமாய் பிற்கால சிங்கள வரலாற்று இலக்கியங்களில், புத்தரே நேரடியாக இலங்கைக்கு 3 முறை வருகை புரிந்தார் என்றும், அங்கே 16 இடங்களில் தங்கிய அவர்,5ஆயிரம் ஆண்டுகளுக்குப் பௌத்த நாடாகவே இலங்கையைக் கட்டிக்காத்திட வேண்டுமெனச் சிங்களர்களுக்கு கட்டளை இட்டுச் சென்றார் என்றும் அவரின் நினைவாய் அவர்தம் புனிதப் பல்லும், பிச்சைத் திருவோடும் இன்றுவரை இலங்கையில் பாதுகாக்கப் படுவதாகவும் மேலும் அசோகனின் பிள்ளைகளான மகேந்திரனும், சங்கமித்திரையும் வான் வழியே இலங்கைக்கு போதி மரக்கிளையைக் கொண்டு வந்ததாகவும் அம்மரம் இன்றும் உயிரோடு சக்தி பெற்றிருப்பதாகவும்,மூடப்புனை கதைகளைச் சொல்லி சிங்களவர்களுக்கு பௌத்த வெறியேற்றி தமிழர்களை மத அடிப்படையில் முற்றும் அழித்தொழிக்க வேண்டியது தங்கள் அனைவரின் மதப்புனிதக் கடமை என்றுகூறி உண்மை புத்தநெறியையே கேள்விக்கு உள்ளாக்கினர்.
1958இல் தொடங்கப்பட்ட தமிழர்கள் மீதான முதல் படுகொலைத்தாக்குதல்,இன்றுதொடர்ந்து 50 ஆண்டைத் தாண்டி மிகக்கோர வடிவெடுத்துள்ளது. தமிழர்கள் உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடக்கம் முதல் அற வழியிலேயே போராடினர்.1956இல் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்பதான தமிழ் உரிமை மறுப்புச் சட்டத்தை எதிர்த்து அறவழிப் போராட்டம் நடத்துவதற்குக் கூடிய நம் தமிழர் கூட்டத்தினுள் ஆயுதம் தாங்கிய பௌத்த மத வெறி அமைப்பினர் உட்புகுந்து தாக்கி அங்கேயே 150 தமிழர்களையும் கொன்று போட்டனர்.


தமிழினத்திற்கு எதிராக நாளும் பெருகிக் கொண்டு வந்த இத்தாக்குதல் போக்கை எதிர்த்து, தமிழர்கள் அனைவரும் ஈழத்து காந்தி என்றழைக்கப்பட்ட தந்தை செல்வாவின் தலைமையில் ஓரணியாயினர். தமிழர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாக சிங்களவர்;கள் ஒப்புக்கு நிறைவேற்றிய 26.07.1957 பண்டார நாயகா-செல்வா ஒப்பந்தமும், 24.03.1965 டட்லி சேனநாயகா-செல்வா ஒப்பந்தமும் பின் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்களவர்களாலேயே கிழித்தெறியப்பட்டது. அப்போதும் தந்தை செல்வா அறவழியில் தமிழர்களுக்காகத் தனி அஞ்சல் துறை நடத்திக்காட்டுவதன் வாயிலாகவே எதிர்ப்பைத் தெரிவித்தார். ஆனால் சிங்களவர்களோ அமைதியாகப் போராடும் தமிழர்கள் மீது ஆயுதத்தாக்குதல் வெறியையே கையாண்டு வந்தனர்.
இந்நிலையில் 1974இல் சனவரி 3 முதல் 10 வரை யாழ்ப்பாணத்தில் கூடிய நான்காம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு இறுதி நாளில், ஆயுதம் தாங்கிய சிங்கள காவல்படை உட்புகுந்து 9 தமிழறிஞர்களைச் சுட்டு வீழ்த்தியது. இதில் மேலும் 100க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிங்களவனின் இவ்வட்டூழியங்கள் நாளுக்குநாள் எல்லை மீறிப்போகவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாய்க் கூடிய பண்ணாகம் வட்டுக்கோட்டை மாநாடு (14.05.1976) ‘தனித்தமிழ் ஈழமே’ நிரந்தரத் தீர்வாகும் என ஒருமனதாகத் தீர்மானித்து அறிவித்தது. அம்முழக்கத்தையே முன்வைத்து அடுத்து வந்த 1977 தேர்தலில் போட்டியிட்ட தமிழர்கள் 80 சதவீதம் வாக்குபெற்று 19 இடத்தில் 18ஐ கைப்பற்றி தனித்தமிழீழக் கோரிக்கையே மக்கள் தீர்ப்பு என்பதாக உலகுக்கு அறிவித்தனர்.

நாளும் பெருகிவந்த தமிழீழக் கோரிக்கை ஆதரவு எழுச்சியைச் சகிக்கமுடியாத சிங்களவர்கள், ஜீலை 1983ல் மொத்தத் தமிழர்களின் மீதும் வரலாற காணாத வன்முறையை ஏவினர். தமிழ் கர்பிணிப்பெண்களின் வயிற்றைக்கீறி, கொதிக்கும் தாரில் குழந்தைகளைப் போட்டு, தமிழ் மக்களை அவர்களின் வீட்டிலே அடைத்துப்பூட்டிக் கொளுத்தினர். உயிரோடிருந்த குட்டிமணியின் கண்ணைப்பிடுங்கி பூட்ஸ் காலில் போட்டு மிதித்த இராணுவம் அவருடனான 56 போராளிகளையும் சுட்டுக்கொன்றது. “கருப்பு ஜீலை” என்றே பதிவாகிவிட்ட அந்நாளில் தொடர்ந்து நடைபெற்ற படுகொலையில் ஒருவாரத்திற்குள்ளாகவே கொழும்பு நகரில் மட்டும் 3 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு, தமிழர்களின் 116 ஆலைகள் தீக்கிரையாக்கப்பட்டு, இறுதியில் தமிழர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சிங்களம் இந்தியாவின் பகை நாடே
தமிழீழமே நட்புசக்தி

இந்தியாவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட போர் ஆபத்துகளின்போதும், நெருக்கடி நேரங்களிலும் சிங்கள அரசு வெளிப்படையாகவே இந்தியாவின் எதிரணியில் போய்ச்சேர்வதையே வாடிக்கையாய்க் கொண்டுள்ளது.
கி.பி.1961இல் இந்தியா மீதான சீன ஆக்கிரமிப்புப் போரின் போது பௌத்த மதப்போர்வையில் இலங்கை, சீனாவின் பக்கம் நின்று நேரடியாக இந்தியாவை எதிர்த்தது. கி.பி.1965, 1971இல் இந்திய பாகிஸ்தான் போர் மூண்ட போதும், சிங்களம் தன் முழு ஆதரவை பாகிஸ்தானுக்கே அளித்து நின்றதே வரலாறு. அதைத் தொடர்ந்து அமெரிக்க வல்லாதிக்க இராணுவத்திற்கு தென் ஆசியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இராணுவ மையமாகக் கருதப்படும், நம் திரிகோணமலையில் தளம் அமைத்துக் கொள்ள அனுமதி அளித்தது, அதன் வழியே ஆசியாவின் மிகப்பெரும் இராணுவ பலம் பொருந்திய இந்தியாவிற்கு நிரந்தர அச்சத்தை ஏற்படுத்திடச் சூழ்ச்சியும் செய்தது. ஆனால் நம் தமிழீழப் போராளிகளின் எதிர் தாக்குதலால் இன்றுவரை அமெரிக்கப் படை அங்கே உள்நுழைய முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நம் மண்ணான கச்சத்தீவைத் தமிழகத் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் 1974இல் சிறிமாவோ பண்டிரநாயகா சூழ்ச்சியாக கேட்டுப்பெற்றுக் கொண்டதோடல்லாமல் அவ்வழியே செல்லும் தமிழர்களின் ஒப்பந்த உரிமையைக்கூட மதியாதவர்களாய் நம் மீனவர்கள் மீதே சிங்களவர்கள் இராணுவத் தாக்குதல்கள் நடத்தவும் துணிந்துவிட்டனர். இதில் இலங்கை அரசு, நமது அப்பாவி இந்தியத் தமிழக மீனவர்களைக் கடந்த 30 ஆண்டுகளாகக் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்வதில் இதுவரை 3000க்கும் மேலான தமிழர்களின் உயிர்பறிப்பு, மீனவர்களின் வாழ்வாதார தொழில் அழிப்பு என்பதுமாய்த் தொடர்கிறது. இவ்வத்துமீறலான தாக்குதலெல்லாம் இந்திய இறையாண்மையின் மீது நடத்தப்படும் தாக்குதல்களாகவே பொருள்படும்.
தொடரும் வரலாற்று நிகழ்வுகள் ஒவ்வொன்றிலுமே இலங்கை இந்தியாவை தந்திரமாகவே ஏமாற்றி வருவதையே அடுக்கடுக்காய் காண முடிகிறது. கி.பி.1964இல் இலங்கையில்,இந்திய வம்சாவழி மலையகத்தமிழர்களின் உரிமைப் பறிப்பைச் சீர்செய்வதற்கெனப் போடப்பட்ட சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தை சிங்களவர்கள் இன்றுவரை நடைமுறைப்படுத்தவே இல்லை. கி.பி.1974இல் செய்யப்பட்ட கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் உரிமை தொடர்பான இந்திரா-பண்டாரநாயக்கா ஒப்பந்தமும் இன்றுவரை முற்று முழுக்காக மீறப்பட்டே வருகிறது. கி.பி.1987இல் போடப்பட்ட தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பாக வடக்கு, கிழக்கை அங்கீகரிப்பதாகக் கூறிய இராசீவ்-செயவர்த்தனே ஒப்பந்தமும் கிடப்பிலேயே கிடக்கிறது. ஓவ்வொரு கட்டத்திலும் தமிழர் போராட்டத்தின் எழுச்சியைத் தனிப்பதற்கே: இந்தியாவின் வழி மத்தியஸ்த்தம் செய்வதாக கூறி ஏமாற்றவே இலங்கை அரசு ஒப்பந்த நாடகத்தை அரங்கேற்றி, இந்தியாவையும் தமிழீழ மக்களையும் ஒருசேர ஏமாற்றி வருகிறது.
எப்போதும் இந்தியாவின் நேரடியான பகைமை சூழ்ச்சி நாடாகவே தொடர்ந்து இருந்துவரும் சிங்கள அரசை இந்தியாவின் இன்றைய அரசியல்வாதிகளும் ஆட்சி நிர்வாகத்தில் உள்ளோரும் சரியாக அடையாளம் காண இப்போதும் தவறுவார்களேயானால், எதிர்காலத்தில் சிங்கள அரசு உலக வல்லரசுகளின் கைப்பாவையாய் மாறி இந்தியாவை நிரந்தர பீதியில் தள்ளப்போவதைத் தடுக்கவே முடியாது. இவ்வரலாற்றுப் பிழையை நேர் செய்து தென் ஆசிய பிராந்தியத்தில் அமைதி நிலைப்பெறச் செய்ய வேண்டுமானால், இந்தியா, தமிழீழத்தை ஆதரிக்க வேண்டிய ஒன்றே சரியான தீர்வாகும்.தாயகத் தமிழர் கடமை

உலக அரங்கில் சோவியத் ஒன்றியத்தின் சிதைவிற்குப் பின்னான இன்றைய காலநிலையில், நாடுகளுக்குள்ளான உறவுகள் என்பது நியாயத்தின் அடிப்படையிலன்றி, வல்லாதிக்கத்தின் அடியொற்றியே அமைக்கப்படுகிறது. இன்றைய உலக வல்லரசுகள் எல்லாம், பிறநாட்டு மக்களின் உரிமையை மதிப்பதைவிட, அவர்களிடமிருக்கும் பொருளாதாரத்தைச் சுரண்டவே பெரிதும் விரும்புகின்றனர். இவ்வடிப்படையில்தான் அமெரிக்கா, இசுரேல், பாகிஸ்தான், இந்தியா, சீனா போன்ற வல்லரசுகள் இலங்கையில் பெருமுதலீடு செய்யவும், தங்களின் வியாபாரச் சந்தையைப் பெருக்கிக் கொள்ளவுமாய் முனைப்போடு உள்ளனர். இவர்களின் தடையற்ற பொருளாதாரச் சுரண்டலுக்குச் சிங்களவனின் கீழ் உள்ள ஒன்றுபட்ட இலங்கையே உவப்பானதாகும்.

மேலும் இடைப்பட்ட இப்போர் நடப்பிலுங்கூட இவ்வல்லரசுகள் தங்களின் இராணுவத் தளவாட வியாபாரத்தை வேகமாக நடத்தி போட்டி போட்டுக் கொண்டு பணம் பறித்தவாறு உள்ளனர். இவர்களின் இவ் அவசர வியாபாரத் தேவைக்கு முன் நசுக்கப்படும் நம் தமிழர்களின் உரிமை என்பது புறந்தள்ளப்பட வேண்டிய ஒன்றாக அமிழ்ந்து விடுகிறது. மேலும் அதன் காரணமாகவே தமிழீழப் போராட்ட ஆதரவு நிலைப்பாட்டை இக்கூட்டத்தினர் கண்மூடித்தனமாக ஒடுக்க முற்படுகின்றனர். உலகின் பெருமளவிலான நாடுகள் தமிழீழப் போராட்டத்திற்கு எதிர்நிலை எடுத்திருப்பதும் இத்தகு காரணத்தையொட்டியே என்பதை உணர வேண்டும்.
30 ஆண்டுகளாகத் தொடரும் இவ்வகை நெருக்கடியால், உலகினரின் இப்பாராமுக சூழ்ச்சிப் பின்னலால் முற்றும் முழுக்காக நாசமடைவது நம் தமிழின இரத்த உறவுகளே. உலகில் ஓர் இனம் தாக்குறும் போது அவ்வின மொழியினர்

எந்த நாட்டிலிருந்தாலும் அதைக் கண்டிப்பதும் குரல் கொடுக்கக் கொதித்தெழுவதுமே அவ்வின மக்கள் அனைவரின் கடமையும் உரிமையுமாகும் என்பதை இங்கே நாம் நினைவு கொள்;ள வேண்டும்.
இலங்கையில் சிங்களவர்களால் இது நாள் வரையில் ஓர் இலட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் பொருளாதாரம் சீர் குலைக்கப்பட்டு, 10 இலட்சம் தமிழர்கள் அயல்நாடுகளுக்கு அகதிகளாகத் துரத்தப்பட்டு 20 ஆயிரம் போராளிகளின் உயிரைப்பறித்து, உள் நாட்டிலேயே இலட்சக்கணக்கானத் தமிழர்களை அவர்களின் இருப்பிடம் விட்டு அங்கும் இங்குமாய் அல்லலுறச் செய்துகொண்டு, தமிழ்ப் பொது மக்களுக்கான உணவு, மருந்து, குடிநீர், மின்சாரம், சுகாதார அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தடுத்து, இது நாள் வரை தமிழர்கள் மீது ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை நீடித்தபடி மொத்தத்தில் தமிழர்கள் ஒரு திறந்தவெளிச் சிறைவாசிகளாகவே ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு குரலற்றவர்களாக நசுக்குறும் நம் ஈழத்தமிழர்களைக் காக்கவல்லது தாய்த்தமிழர்களான நம் ஆதரவுக்குரலாக மட்டுமே இருக்க முடியும். அங்கே அழிவின் விளிம்பிற்கே கொண்டு நிறுத்தப்பட்டிருக்கும் நம் இனத்தை, போராடிக் காக்கும் கடமையேற்று களத்தில் உலகே வியக்கும்படித் திறனுறச் செயல்பட்டு வரும் ஒரே விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் மீது இந்தியா விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டுமென்றும், தனித்தமிழ் ஈழமே தமிழின விடியலுக்கான நிலைத்த பயன் தரும் வெற்றி முழக்கமாகும் என்பதையும் முன்னெடுத்து முன்னேறுவோம் வெற்றி கொள்வோம்.தனித் தமிழ் ஈழம்
“ஓர் இனத்தின் நிலையான வாழ்வுக்கு வரையறை செய்யப்பட்ட நிலப்பரப்பு தேவை என்பதே” நாடு இனம் பற்றிய உலகியல் முன்மொழிவு. அவ்வழியேதான் அவ்வினம் தன் பண்பாட்டை, மொழியை, வாழ்வியல் வளங்களை நிலை நிறுத்திக் கொள்ள இயலும். எனவே, நாடு என்பது ஓர் இனத்திற்கு உயிர் போன்றது. இதைத்தான் அய்.நா மன்றம் “எந்த ஒரு தேசிய இனத்திற்கும் தங்களுக்கான இறைமையுடைய ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கிக்கொள்ள உரிமை உண்டு” என்று வரையறுத்து 1970 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் பிரகடனமாகக் கூறுகிறது.

மொழி என்பதே ஓர் இனத்தின் நிலைத்த அடையாளமாகும். மேலும் அவ்வினம் தன் அடையாளத்தைத் தற்காத்துக் கொள்;ள வேண்டுமெனில், அதற்கென உரிய சொந்த நாடு என்ற ஒன்று தவிர்க்கவியலாத் தேவையாகும். அண்மையில் இசுரேல் என்ற ஒரு நாடு உருவாக்கப் -பட்டதாலேயே ஆயிரமாண்டுகளுக்கு முன் இறந்து போன “ஹீப்ரு” மொழி மீண்டும் உயிர் பெற்று நிலைத்து நிற்கிறது. 4 இலட்சம் மக்கள் தொகையே கொண்டபோதும் தனக்கென ஒரு நாடிருப்பதால் மால்டா தன் “மால்டீஷ்” மொழியைக் காக்க முடிகிறது. 3,50,000 மக்கள் தொகையே கொண்ட சின்னஞ்சிறு தீவு நாடான மாலத்தீவு அதன் பாரம்பரிய “திவேஷி” மொழியை வளர்த்து நிற்கிறது. 3 இலட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஐஸ்லாண்ட் மக்கள் அவர்களின் மொழியான “ஐஸ்லாண்டிக்”கை அரணாகக் காத்து நிற்கிறார்கள். ஆனால் 8 கோடி மக்கள்;தொகை கொண்டிருக்கும் தமிழ் மொழியோ அழியப்போகும் மொழிகளின் பட்டியலில் இருப்பதாக மொழியறிஞர்கள் கூறும் நிலையில் உள்ளது. ஏனெனில் தமிழ் மொழிக்கென சொந்தமாய் ஒரு நாடில்லை என்பதே நேரடி ஒற்றைக் காரணம்.
இதன் வழி நோக்குகையில் தனித்தமிழீழப் போராட்டமானது உலகெங்கிலுமுள்ள தமிழ்ப் பேசும் 8 கோடி மக்களின் உரிமைப்போரே என்பது எளிதில் விளங்கும்.
இதில் மேலும் நிலத்தியல் அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும்கூட உலகில் உள்ள 180 க்கும் அதிகமான நாடுகளில் 80 நாடுகள் தமிழீழத்தைவிட நிலப்பரப்பில் சிறியனவே.
உலக வல்லரசாக எழுந்து நிற்கும் ஜப்பான் பெரும் நிலவளமற்றது பூகம்பம் நிறைந்தது, வெறும் மனித உழைப்பையும் தொழில்நுட்பத்தையும் மட்டுமே நம்பி நிற்கிறது. இசுரேலை எடுத்துக் கொண்டால் வெறும் பாலைவனம் மட்டுமே எஞ்சும். அதுவும் நவீன தொழில் நுட்பத்தை மட்டுமே சார்ந்துள்ளது. இன்னும் இது போன்றே உலகின் பல்வேறு நாடுகளின் நீர்நிலவளத்தைத் தமிழீழத்தோடு ஒப்பீட்டுப் பார்த்தோமானால், நம் தமிழீழம் மிக வளம் பொருந்திய நாடே.
இலங்கையின் மொத்த உற்பத்தியில் தமிழீழப் பகுதியில் இருந்து மட்டுமே நெல் 31சதவீதம் மிளகாய் 18சதவீதம் வெங்காயம் 38சதவீதம் உப்பு 90சதவீதம் மீன் வளப்பரப்பு 73.4சதவீதம் மீன் உற்பத்தி 52 பதனிடப்பட்ட மீன்கள் 90சதவீதம் கடலட்டைகள் ஏற்றுமதி முழுக்க தமிழீழப்பகுதியில் மட்டுமே நடைபெறுகிறது. மேலும் உலகின் மிகச் சிறந்த பருத்தி விளைவிடமாக யாழ்ப்பாண பூநகரியே உள்ளது. இவ்வகையே உலக அரங்கில் தனித்தியங்கவல்ல அனைத்துச் செழிப்பையும் தமிழீழம் தன்னடக்கி உள்ளது என்பது வெளிப்படை.
இத்தகு பின்புலங்களையெல்லாம் ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும் கூட, உலகில் புதிய நாடுகள் தோன்றுவதற்கானப் போராட்டங்கள் அம்மக்களின் உரிமை மறுப்பிலிருந்தே பிறந்தெழுகிறது..முன்னேறுகிறது…வெற்றியையும் பெற்றுத் தருகிறது…

நம்புங்கள் நாளை தமிழீழம் பிறக்கும்....
யாழ்ப்பாண நூலக எரிப்பு....
தமிழின வரலாற்றின் மீது வீசப்பட்ட அணுகுண்டு...
வரலாற்றுக் காலந்தொட்டே தமிழர்களின் பண்பாட்டுச் செழுமையின் மீதும், அறிவுச் செல்வங்களின் மீதும் பொறாமையிலும், வெறுப்பிலும் முகிழ்த்திருந்த சிங்களவர்கள் அதன் காரணமாகவே தங்களின் கட்டற்ற இனவெறித்தாக்குதல் போக்கில் எந்த வரையறையும் வைத்துக்கொள்ளாது, அறிவிரக்கமற்ற முறையில் வெறியாட்டமிட்டனர். அதன் உச்சமாய் அதுநாள்வரையான உலக வரலாறு கண்டிராத வகையில் யாரொருவரும் செய்யத்துணியாத மிகப்படுபாதகச் செயல் ஒன்றையும் திட்டமிட்டு செய்யத்துணிவு கொண்டனர்.

தென் ஆசியாவின் மிகப்பெரியதும், மிக அரிய நூல்களைக்கொண்டதுமான தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பான நூலகத்தை 31.05.1981 நடு இரவில் இலங்கை இராணுவமும், காவல்துறையுமாகச் சேர்ந்து தீ வைத்து எரித்தனர்.1933இல் யாழ்ப்பாணத்தில் கே.எம்.செல்லப்பா என்னும் ஓர் நூல் ஆர்வலரின் முயற்சியால் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 844 நூல்களுடன் தொடங்கி பின் இந்திய அமெரிக்க உதவியுடன் பண்டையத்தமிழர்களின் கட்டடக் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து, 1959இல் யாழ்ப்பாணப் பொது நூலகமாக விரிவடைந்து சிறுகச்சிறுகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 97 ஆயிரம் நூல்களும் மொத்தமாய் எரிந்து அன்று ஒரே இரவில் சாம்பலாகிப்போனதைக் கண்டு யாழ் நகரமே கண்ணீர் வடித்தது. அதற்கடுத்த நாள் காலை அதை நேரில் காண நேர்ந்த பன்மொழி அறிஞர் தாவீது அடிகள் அவர்கள் அப்போதே நெஞ்சு வெடித்து இறந்து போனார்.
இதில் தமிழர்களின் திரும்பப்பெறவியலா, அறிவுச்செல்வங்களாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த மூலநூல்கள் பலவற்றையும் நாம் இழக்க நேரிட்டது, வரலாற்றில் எந்த ஒரு இனத்துக்குமே நடந்திராத கொடுந்துயராய் தொங்கி நிற்கிறது. எரிக்கப்பட்ட அந்நூலகக் கட்டடத்தை வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாத்திட வேண்டும் என்ற நியாயமானக் கோரிக்கையைக்கூட ஏற்க மறுத்த சிங்கள அரசு அதையும் பின்னாளில் இடித்து தரைமட்டமாக்கியது.

ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி டெல்லி பயணம்.

கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தைச்சேர்ந்த ஜெகதாபட்டினம் அருகே மீன் பிடிக்கச் சென்ற புதுச்சேரி பகுதி காரைக்கால் மீனவர்கள் 15 பேர் உட்பட 28 மீனவர்களைச் சிங்கள கடற்படை கடத்திச் சென்று இலங்கை சிறையில் அடைத்துள்ளது.

இதனைக் கண்டித்து புதுச்சேரியிலுள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலர் சு.பாவாணன் தலைமைத் தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், இரா.மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள், லோகு.அய்யப்பன், தலைவர், பெரியார் தி.க., கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தங்க.கலைமாறன், தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி, முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன், அமைப்பாளர், வ.செல்வராஜ், பொறுப்புக் குழு உறுப்பினர், ம.தி.மு.க., சி.மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, ந.மு.தமிழ்மணி, அமைப்பளர், செந்தமிழர் இயக்கம்,
இரா.அழகிரி, தலைவர், தமிழர் தேசிய இயக்கம், எஸ்.யூ.முத்து, தலைவர், பார்வர்டு பிளாக் கட்சி, தி.சஞ்சீவி, தலைவர், இராஷ்டிரிய ஜனதா தளம், நடராசன், முரசொலி பேரவை, ச.ஆனந்தகுமார், புதுவைக் குயில் பாசறை, கஜேந்திரன், தலைவர், பசுமை பாரதம் ஆகிய கட்சி, இயக்கத் தலைவர்கள் கலந்துக் கொண்டு கணடன் உரையாற்றினர்.

இலங்கை கடற்படையால் கடத்தப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

காரைக்கால் பகுதி கிளிங்சல்மேட்டைச் சேர்ந்த திருமுருகன், தமிழ்மணி, குமார், சக்திவேல், நாகராஜ், காரைக்கால் மேட்டைச் சேர்ந்த பன்னீர், ராஜ், சுப்பிரமணியன், முருகவேல், காசாக்குடிமேட்டைச் சேர்ந்த சிவவடிவேல், சின்னையன், செல்வகுமார், கார்த்திக் ஆகியோர் இலங்கை கடற்படையால் கடத்தப்பட்டு தற்போது் இலங்கைச் சிறையில் வாடி வருகின்றனர்.

Thursday, December 11, 2008

ஈழப்பிரச்னையில் இங்கிலாந்து அரசு தலையிடவேண்டும்: பேரறிஞர். வே.ஆனைமுத்து

இங்கிலாந்து அரசு விட்டுச் சென்ற வரலாற்றுப் பிழையினாலேயே தமிழர்கள் இத்தனை துன்ப, துயரங்களுக்கு ஆளாக நேரிட்டுள்ளது. எனவே இங்கிலாந்து அரசு ஈழப்பிரச்சினையில் தலையிடவேண்டும். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என மார்க்சிய பெரியாரிய பேரறிஞர். வே.ஆனைமுத்து தெரிவித்துள்ளார்.

ஈழம் அறியவேண்டிய உண்மைகள் நூல் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், 09/12/2008 செவ்வாய்கிழமை புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. தோழர்.ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈழம் அறியவேண்டிய உண்மைகள் என்ற நூலை புதுவை மாநில முன்னாள் அமைச்சரும்,ம.தி.மு.க மாநில அமைப்பாளருமான நா.மணிமாறன் வெளியீட, விடுதலை சிறுத்தைகள் அமைப்புச் செயளாளர் சு.பாவாணன் பெற்றுக் கொண்டார்.

மார்க்சிய பெரியாரிய பேரறிஞர். வே.ஆனைமுத்து கருத்தரங்க சிறப்புரையாற்றினார். தனது சிறப்புரையில், ஈழப்பிரச்னை, ஈழத் தமிழர் படும் இன்னல்கள் குறித்தும், தமிழ்நாட்டில் தன்னெழுச்சியான போராட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டு, இது தமிழ்நாட்டு பிரச்னையாக இருப்பதால், இந்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. ஈழப்பிரச்னையை தமிழகத்தை கடந்து இந்தியப் பிரச்சினையாக எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும்,கடமையும் தமிழர்களாகிய நமக்கு உள்ளது.

1948- பெப்ரவரி 4 ந்தேதி, இங்கிலாந்து அரசு, இலங்கையின் அரசுரிமையை சிங்களவர்களின் கையில் கொடுத்துச் சென்றது மிகப் பெரிய வரலாற்றுப் பிழை. அப்பிழையினாலே தமிழர்கள் இத்தனை துன்ப,துயரங்களுக்கு ஆளாக நேரிட்டது. தான் செய்த பிழையை திருத்திக் கொள்ளும் விதமாக, இங்கிலாந்து அரசு ஈழப்பிரச்னையில் தலையிடவேண்டும். இங்கிலாந்து பாராளுமன்றம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

கருத்து பரப்பல் என்ற நோக்கில் "ஈழம் அறியவேண்டிய உண்மைகள்" நூல் அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது. போரை நிறுத்து ! என்ற வாசகத்துடன் கூடிய டி-சர்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.

சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

மனதை மயக்கும் பழையபாடல்