வருக வணக்கம்

Saturday, May 30, 2009

ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள் அறவோர்களே!


தமிழீழத்தில் இருந்த தமிழரசாங்கம் இன்று வன்முறையாலும் சூழ்ச்சியாலும் வீழத்தப்பட்டுள்ளது. 1948 முதல் தமிழீழமக்கள் போராடி, உழைத்துப் பெற்ற தங்கள் நிலத்தை மாபெரும் கூட்டணி எதிரிகளிடம் இழந்துள்ளனர்.தம்மினும் பல மடங்கு பலம் கொண்ட பகைவர்களிடம் தம் நாட்டை இழந்துள்ளனர்.

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்து, முழுவதும் தமிழ் நிலமாக இருந்த ஈழ நாட்டில், சிங்கள வந்தேறிகள் நாவலந்தீவின் நயவஞ்சகர் உதவியோடு மெல்ல மெல்ல தமிழினத்தைத் துடைத்து அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்குகின்ற முயற்சியில் பல நூறாண்டுகளாக வெற்றிகளைப் பெற்று வருகிறார்கள். அதன் தொடர்ச்சியான அழிப்புகள்தான் நாம் இன்று கண்முன் கண்டு கலங்கிக் கிடப்பது.


இராசபக்சே பறனையில் இருந்து இறங்கி மண்ணை முத்தமிட்டான் என்று சொல்கிறார்கள். அது என்ன அவன் தாய் மண்ணா? தமிழனிடம் இருந்து பிடுங்கிய மண்தானே? கி.மு 500களில் கூட்டம் கூட்டமாய் வந்து மெல்ல மெல்ல நயவஞ்சகத்தால் தமிழனிடம் இருந்து பிடுங்கிய நிலத்தை நக்கியிருக்கிறான் இராசபக்சே; முத்தமிடவில்லை.

இராசபக்சே மண்ணை நக்கிய உடனே ஆர்ப்பரித்துக் கொண்டாடி மகிழ்கின்றது சிங்களக் கூட்டமும் அதற்குத் துணைபோன கூட்டமும். அவர்கள்தான் பகைவர்கள் என்றால் இன்னொரு சாரார் "அதுக்குதான் அப்பவே சொன்னேன் ஆயுதமேந்தியது தப்பு" என்று சொல்லால் அடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இலங்கை நிலத்திலே இருந்தது தமிழர்கள் மட்டுமே. இடையிலே சிங்களக் குடியேற்றத்தால் அங்கே இரு இனங்கள் ஏற்பட்டு இரு நாடுகள் பன்னெடுங்காலமாகவும் இருந்திருக்கின்றன. கடந்த 500 ஆண்டுகளில் போர்த்துக்கீசியரிடம் 100+ ஆண்டுகளும் தச்சுக்காரர்களிடம் 100+ ஆண்டுகளும் வெள்ளையர்களிடம் 130+ ஆண்டுகளும் சிங்களரிடம் 60+ ஆண்டுகளும் ஈழத்தமிழ் மண் அடிமைப் பட்டுக் கிடந்திருக்கிறது.
இந்த 500 ஆண்டுகளில் தமிழர்கள் அங்கே இழந்திருப்பவை கணக்கிடமுடியாதவை.

போர்த்துக்கீசியன் ஆண்டபோதும் வெள்ளையன், தச்சுக்காரன் ஆண்டபோதும் கூட அவர்கள் தமிழ் மண்ணின் வளங்களைக் கொள்ளை கொண்டார்களே ஒழிய தமிழ் இனத்தை முற்று முழுதாக கொன்றொழிப்பது அவர்கள் எண்ணமாக இல்லை.வெள்ளைக்காரன் தமிழீழ நாட்டையும் சிங்கள நாட்டோடு ஒட்டி சிங்களனுக்கு நாட்டாமை கொடுத்த பின்னர் சிங்களம் முற்று முழுதாக தமிழின அழிப்பைச் செய்தது. அதை எதிர்த்தத் தமிழ் மக்கள் எல்லாம் இரக்கமின்றி கொல்லப் பட்டனர். அவர்களின் உடைமைகள் எல்லாம் பறிக்கப் பட்டு அவர்கள் உழும் நிலங்களும் வாழ்வாதாரங்களும் சிங்களக் குடியேற்றத்திற்குக் கொடுக்கப் பட்டன. இதனை யாரேனும் மறுக்க முடியுமா?

1956லே சிங்களருக்கே சிங்களம் என்ற சட்டமும் ஆக்கப்பட்டது. சிங்களரின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளவே தமிழர்களுக்கு நாளாகியது. ஏறத்தாழ 1948 முதல் 1977 வரை சிங்கள அரசாங்கத்திடம் உண்ணாநோன்பு, பேரணி, மறியல் என்று போராடிப் பார்த்த மக்களுக்குக் கிடைத்தது எல்லாமே படுகொலைகளும்,கலவரங்களும், கற்பழிப்புகளும்தான்.

05-06-1956க்கும் 19-12-2000க்கும் இடையேயான 44 ஆண்டுகளில் மொத்தம் 115 இனக்கலவரங்களையும், தமிழ்ப் படுகொலைகளையும் சிங்கள அரசாங்கம் முன்நின்று நடத்தியிருக்கிறது.

இனக்கலவரங்களை நடத்திவிட்டு சிங்கள அரசாங்கமும் சிங்களத் தலைவர்களும் என்ன சொன்னார்கள்?

"ஏய் உங்களை உதைக்கிறதும் நாங்கதான் -போனாபோகுதுன்னு விடுறதும் நாங்கதான்.இந்தியாவையாக் கூப்பிடுறீங்க? அதன் படைகள் இங்கு வந்து சேர 14 மணி நேரம் ஆகும்.ஆனா எங்களுக்கு 14 நிமிடங்கள் போதும் உங்கள் அனைவரின் குருதியையும் மண்ணில் கொட்ட" என்று காமினி திசநாயக்கா என்ற சிங்கள மூத்த அமைச்சர் சொன்னான்.

இனக்கலவரங்களின் உச்சம் என்று சொல்லப்படுகின்ற 1983 கலவரத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு, பல ஆயிரம் தமிழர்களை புலம் பெயர வைத்து விட்டு, அரச தலைவர் செயவர்த்தனா கொண்டாடி மகிழ்ந்தான். என்ன சொல்லி?

"யாழ்ப்பாணத்துக்காரங்க இதைப் பற்றி என்ன சொல்றாங்க என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவர்களைப் பற்றியோ அவர்களின் உயிர்களைப் பற்றியோ அவர்களின் கருத்துக்கள் அல்லது தேவைகளைப் பற்றியோ எங்களால் சிந்திக்க முடியாது. வடக்கே தமிழர்களை நாங்கள் எவ்வளவு நெருக்குகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு தெற்கே எமது சிங்கள மக்கள் மகிழ்வடைகிறார்கள்.

உண்மையில் தமிழர்களைப் பட்டினி போட்டால் எமது சிங்கள மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள்." இப்படி எந்த ஒரு நாட்டின் அரச தலைவராவது சொல்லியிருக்கிறார்களா? சொல்லி விட முடியுமா? "தமிழர்கள் சிறுபான்மையினர். சிங்களவர் என்ற மரத்தை அண்டி, நத்தி கொடியாய் தமிழர்கள் ஒட்டி எமது தயவில் வாழ்ந்து கொள்ளலாமே தவிர வேறு எந்த உரிமையும் அவர்களுக்கு இல்லை" என்று சொன்னவர் இன்னொரு அரச தலைவர் விசெயதுங்கன்.

எல்லா மக்களுக்கும் ஆன அரசாங்கம் என்றால் தமிழர்களை அழிக்க அவ்வரசாங்கமே கலவரங்கள் ஏற்படுத்தினால் எங்கே இருக்கிறது அறம்?

தம் சொந்த நாட்டு மக்கள் என்று சிங்கள அரசர்கள் எண்ணாமல் இப்படிப் பேசினால் எங்கேயிருக்கிறது அறம்? சொந்த நாட்டு மக்களைப் படுகொலை செய்யவும் தமிழர்களைக் கற்பழித்து சிங்களமயமாக்கவும், காவல்துறையையும் அரணவத்தையும் அனுப்புகின்ற அரசாங்கம் செய்வது அறநெறியா?

60 ஆண்டுகாலமாக அவர்களைச் சம உரிமை குடிமக்களாக நடத்தாமல், அவர்களின் அந்தக் கோரிக்கையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், அவர்கள் எந்த வழியில் கிளர்ந்தெழுந்தாலும் அடக்கி அழித்து வைப்பதை மட்டுமே செய்து உலகத்தை ஏமாற்றி வரும் சிங்கள அரசு எந்தவகையில் நம்பிக்கை தருகிறது?

1948ல் தொடங்கி, தம்மைக் காப்பாற்றிக் கொள்ள தமிழ் மக்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து 1977ல் தான் தனி நாடாவதைத் தவிர வேறு எதுவும் வழியில்லை என்று சனநாயக முறையில் முடிவு செய்துதான் தம்மைக் காத்துக் கொள்ளும் அறப்போரைத் துவங்கினார்கள்.

அந்த அறப்போர் மெல்ல வலுவடைந்து, அதற்கு இடையூறாகத் தோன்றிய கருணையர்கள், கைக்கூலிகள் பலரிடமும் இருந்து அறப்போரைக் காப்பாற்றி நேர்மையான ஒரு தலைமையின் கீழ் தமிழீழ அரசு அமைந்து ஆட்சி செய்து வந்தது.

எந்த நாட்டிற்கும் அரணவம் உண்டு. அதுபோல்தான் தமிழீழத்திற்கென்று அரணவம் ஏற்படுத்தப் பட்டது. அதற்குப் பெயர்தான் விடுதலைப்புலிகள். அந்த அரணவம்தான் ஈழத்தமிழர்களுக்குக் காவலாக இருந்தது.

எல்லா அரணமும் துப்பாக்கிதான் வைத்திருக்கின்றன. பீரங்கிதான் வைத்திருக்கின்றன. தமிழீழ அரணமும் அதைத்தான் வைத்திருந்தது.

தனித் தமிழீழச் சித்தாந்தம் 1977ல் தந்தை செல்வா உருவாக்கியதன் பின்னர், தமிழீழத் தனி நாட்டிற்குத் தேவையான பொருளியல், கொள்கைகள், அரணம் என்று ஒவ்வொன்றும் மிக இயல்பாக உருவாக ஆரம்பித்தது. அதை முழுமை செய்ததும் நிறைவாகச் செய்ததும் விடுதலைப்புலிகள் அமைப்பினர். அவர்கள் ஏற்படுத்திய அரணமே தமிழீழ அரணமாக நிலைத்தது.

புதிதாக, வளர்ச்சியில் இருக்கின்ற ஒரு போராட்டக் குமுகத்தில் சிற்சில பிழைகளோ தவறுகளோ நடப்பது இயல்பு. (கோடி கோடியாகக் கொட்டி செய்யப்படுகிற சொவ்வறைகளில் (software) சில பிழைகள் வருவது போலத்தான் அதுவும்.)

அறம் தவறாத அந்த அரணத்தின் காவலில் தமிழர்கள் சுகித்திருக்க முடிந்தவேளையில் அதுபொறாத பகைவர்கள் ஒன்று கூடி அதனை நாசமாக்கி விட்டிருக்கின்றனர்.

என்ன அறம் தவறியது தமிழீழ அரணம்? (அதாவது புலிகள்)

சிங்கள அரசு சட்டத்தையும் நீதியையும் சிங்களருக்கு மட்டும் என்று ஆக்கிவிட தமிழ் மக்களுக்கு சட்டமும் நீதியையும் வழங்கியது தமிழீழ அரணம்! அது எந்த வகையில் அறம் மீறியதாகும்.

சிங்கள அரசு தமிழர்களுக்குப் பகையானதால் அதற்குப் பதிலாக வந்த தமிழ் அரசான புலிகள் அரசு சிங்கள அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தமிழ் அரசுக்கே செலுத்தப் பணித்தது. அது எந்த வகையில் அறம் மீறியதாகும்?

சிங்களவர் தமிழ் நிலங்களைக் கைப்பற்றிக் குடியேற்றம் செய்தனர். ஆனால் தமிழீழ அரசு தமிழர் பகுதிகளை மட்டும் வரையறுத்ததே தவிர, சிங்களர் இடங்களைப் போய் கைப்பற்றவில்லை.

பல ஆயிரம் பெண்களை சிங்கள அரணம் கற்பழித்ததுபோல தமிழரணம் என்றும் அந்தப் பஞ்ச மா பாதகங்களைச் செய்ததில்லை.

உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குப் பெண்மைக்கு முன்னணி வழங்கிய ஒரே அரசு தமிழீழ அரசுதான். சாதிச் சழக்குகளை எல்லாம் குறிப்பிடத் தகுந்த அளவு களைந்து நன்னெறி ஊட்டியது புலிகளின் அரசுதான்.

நேர்மையையும் திறனையும் ஈகையையும் தன்மானத்தையும் மட்டுமே முதலாக வைத்து புலிகள் கட்டியதுதான் அந்தத் தமிழீழ அரசும் அதன் அரணமும்.

தமிழீழச் சித்தாந்தத்திற்கு முழுவடிவம் கொடுத்து அகக்காவலுக்கு சட்டமும் நீதியையும் இட்டு, புறக்காவலுக்கு அரணத்தை நிற்க வைத்தவர்கள்தான் புலிகள்.

எந்த நாட்டிலும் குற்றங்கள், தேச துரோகங்கள் என்றெல்லாம் உண்டு. அதற்கான தண்டனையை அந்த நாடுகளின் சட்டம் அளித்துக் கொண்டுதான் இருக்கும். அது போலத்தான் தமிழீழ அரசிற்குள் நடந்த குற்றங்களுக்குத் தக்க தண்டனை அளிக்கப் பட்டிருக்கிறது.

போர் நெறியில் நீங்கி சிங்களனும் அவனின் துணைவர்களும் நச்சு குண்டுகளை வீசியதைப் போல தமிழரணம் என்றும் நெறியில் நீங்கியதில்லை.

இரு வேறு நாடுகளாக இருந்த இலங்கை பூமியில் ஒரு தமிழீழ நாட்டைத் தமிழர் ஆண்டனர். அந்த நாட்டைத் தமிழர்கள் மீண்டும் சிங்களரிடம் இழந்துள்ளனர்.

ஏனென்றால் அவர்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை. சொந்த இனமும் தனது தாழ்வு மனப்பான்மையில் அவர்களைக் கொல்வதற்கே துணைபோயிற்று.

அவர்கள் நடத்தியது ஆயுதப் போராட்டமல்ல. அரசமைத்து அதற்குக் காவலாக ஆயுதத்தை வைத்தனர். அது அரச கடன்.அவர்கள் செய்தது பயங்கரவாதமல்ல. சிங்களப் பயங்கரவாதத்தில் இருந்து தமிழர்களைக் காத்தனர்.

வளர்ந்து உருவாகி வருகின்ற வேளைகளில் அவர்கள் சின்னச் சின்னத் தவறுகளை இழைத்திருக்கலாம். யார் தவறில்லாமல் எல்லாவற்றையும் செய்தது என்று எண்ணிப்பார்த்தால் அவர்களின் பிழைகள் தெரியாது. அப்படி அவர்கள் பிழை செய்திருந்தால் நாடு விட்டு துரத்தப்பட்டும் இத்தனைத் தமிழ் மக்கள் ஆதரவாய் இருக்கமாட்டார்கள்.

சொந்த மக்கள் ஆதரவில்லாமல் அணைப்பில்லாமல் எந்த அரசும் இயக்கமும் நீடிக்க முடியாது. நீடித்த வரலாறு இல்லை. தமிழ்மக்களிடம் உயர்ந்த மதிப்பை ஏற்படுத்திய விடுதலைப் புலிகள் அதனை அறம் செய்துதான் பெற்றிருக்க முடியும். தமிழக மக்களுக்கு அரணாக இருந்துதான் அவர்களின் அன்பைப் பெற்றிருக்க முடியும்.

அதனைப் பிழையென்று பேசினால், அது அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியதாகும். கொல்ல வந்த பசுவைக் கொல்வது பாவமில்லை என்பார்கள். அதுபோலத்தான் கொல்ல வந்த சிங்கள விலங்குகளை தடுத்து நிறுத்திய அரண் விடுதலைப்புலிகள் ஆவர்.

அவர்கள் தடுத்து நிறுத்திப் போராடியதை தீவிரவாதம் பயங்கரவாதம் என்றால் அது சிங்களப் பரிவுகாட்டும் பேச்சு என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

சொந்த மக்களுக்கு நல்லறம் செய்த தந்தை செல்வாவின் போராட்டமும் அதனைத் தொடர்ந்து நல்லறம் செய்த மேதகு பிரபாகரன் அவர்களின் போராட்டமும் சிறந்த அறப்போராட்டத்துக்குக் காட்டுகள். அவர்களுக்கு மேலும் வலுவூட்டி சிங்களப் பகையிடம் இருந்து தமிழர்களைக் காத்தது புலிகள் என்ற ஒழுக்கமிகுந்த அரணம்.

சொந்த மக்களுக்கு அறஞ்செய்யும் தனியரசு மீண்டும் தமிழீழமாக அமையவேண்டும். அதைக்காக்கும் அரணம் மீண்டும் தோன்றவேண்டும். அது இல்லையேல் இது இல்லை. இது இல்லையேல் அது இல்லை.

அதாவது மக்களின் அன்பைப் பெற்ற அறம் செய்யும் அரசாக புலிகள் இல்லாதிருந்தால் இத்தனை வலுவான அரணத்தைக் கட்டியிருக்க முடியாது. இத்தனை வலுவான அரணம் கட்டப் பட்டிருக்காவிட்டால் மக்களைக் காத்து அவர்களின் அன்பைப் பெற்றிருக்க முடியாது.

தமிழர்களின் போராட்டத்தை அமைத்துக் கொடுத்தவன் சிங்களன்தான். அது அற்புதமாகப் பரிணமித்து ஒரு நாடாக ஆகியது. இன்றைய கால கட்டத்திலும் தமிழ் மக்களுக்குப் போராட்ட உத்தியையும் பலத்தையும் கொடுக்கப் போகிறவன் சிங்களன்தான். அறநெறி பிறழ்ந்த அந்தச் சிங்களன்தான் தமிழர்களின் போராட்டக் களத்தை ஏற்படுத்தப் போகிறவன்.

1948லேயே தமிழர்களுக்கு அளிக்கப் படவேண்டிய உரிமைகளை அவன் அளித்திருந்தான் என்றால் தனிநாடு என்ற போரே வந்திருக்காது. இன்றைக்கும் அதைச் செய்ய மறுக்கும் சிங்களன் இவ்வளவு மக்களைக் கொன்று விட்டு அதைச் செய்தாலும் அவனால் இருபுறத்தையும் பேண முடியாது. ஏனென்றால் அவன் செய்தது பெரும்பான்மை என்ற ஆணவத்தில் அமர்ந்து கொண்டு சிறுபான்மையினரை இகழ்ந்து செய்த வதம்.

அந்த வதத்தில் இருந்து தம் இனத்தைக் காக்க கிளர்ந்தெழுந்து ஈகம் செய்த போராளிகளையும் அவர்களின் போராட்டத்தையும் வெறும் "மறப்போர்" என்று சொன்னால் அது அறமல்ல. அவர்களின் மறம் அறத்தைக் காத்தது.

அது அறத்தையும் மறத்தையும் ஒருங்கே கொண்ட தவம்! தமிழீழ விடுதலைப் போர் என்பது ஒரு தவம்! விசுவாமித்திரனின் தவவேள்விக்கும் காவலிருக்க ஒரு அரணம் தேவையிருந்தது. தவ வேள்வி செய்யும் போது அவரைச் சுற்றி ஆயுதமேந்திய இராமனும் இலக்குவனும் எதற்கிருந்தார்கள் என்று எண்ணிப் பார்க்கவேணும்! வீடுபேறு வேண்டி நின்ற முனிவனின் தவவேள்விக்கும் காவலாக மறம் தேவைப்பட்டது.

அப்படித்தான் தமிழ்மக்களின் விடுதலை வேள்விக்குக் காவலாக இருந்தது புலிகளின் அரணம். அதை ஆயுதமேந்திய தவறு என்பது அறிந்தோ அறியாமலோ கொச்சைப்படுத்தும் செயலன்றி வேறில்லை. அதுவும் இன்று அவர்கள் தளர்வுற்று இருக்கையில் சொல்வது நாகரிகமற்றதாகவே கருதப்படும்.

அதனால் அறம் சரி மறம் தவறு என்று இன்று பேசுவது மிகத் தவறு. அறமும் மறமும் ஒன்றுக்கொன்று துணையானவை.

அது இயல்பாக ஈழத்தில் பரிணமித்தது.தமிழருக்குச் சொந்த இனம் கூட துரோகம் செய்ததால் அந்த அற்புதக் கோட்டை தகர்ந்து போய் இருக்கிறது.

சொந்த நாடு என்ற பெயரில் சிங்களன் தனது பெரும்பான்மை என்ற ஆணவத்தில் தமது சொந்த நாட்டுச் சிறுபான்மை மக்களைத் திட்டமிட்டு அழித்த வெங்கோலுக்கு எதிராக அறம் செய்துதான் எதிர்ப்பேன் என்று ஈழமக்கள் முடிவாக இருந்திருந்தார்கள் என்றால் அதிகபக்கம் கோயில்களில் அன்னதானம் மட்டுமே செய்திருக்க முடியும். அதுவும் கொஞ்ச நாளைக்கு.


நன்றி
- நாக.இளங்கோவன்

No comments:

சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

மனதை மயக்கும் பழையபாடல்