வருக வணக்கம்

Sunday, February 22, 2009

சீமான் ஜாமீன் பெறுவதில் சிக்கல்!




விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் இயக்குனர் சீமான் புதுவை போலீசாரால் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலாக காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் இயக்குனர் சீமானை கோர்ட்டு மூலம் நாளை ஜாமீனில் எடுக்க பெரியார் தி.க. வக்கீல்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் சென்னை ஐகோர்ட்டில் நடந்த மோதல் பிரச்சினையால் தமிழகம் மற்றும் புதுவை கோர்ட்டுகளுக்கு நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் வக்கீல்களும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் சீமானுக்கு ஜாமீன் மனு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நன்றி
நக்கீரன்

வெள்ளை மாளிகையில் குவிந்த தமிழ் மக்கள்







அமெரிகாவின் அதிபர் மாளிகை அமைந்துள்ள வெள்ளை மாளிகையை அண்டியுள்ள திடலில் குவிந்த இருபத்தையாயிரத்துக்குமதிகமான தமிழ் மக்கள் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ இனப்படுகொலையை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகை முன்பாகவும் வெளியுறவுத்துறை இராஜாங்க செயலகம் முன்பாகவும் நேற்று வெள்ளிக்கிழமை காலை பதினொருமணியிலிருந்து உறைய வைக்கும் பனியில் 25 ஆயிரம் வரையான தமிழர்கள் திரண்டிருந்தனர். பயங்கரவாதத்தின் பேரால் சிறிலங்கா அரசு முன்னெடுக்கும் தமிழினப் படுகொலைப்போரை நிறுத்தி வன்னி மக்களை காப்பற்றுமாறு அமெரிக்க அரசாங்கத்திடம் கோரினர்.


அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து ஏறக்குறைய 17,000 முதல் 20,000 வரையான தமிழர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்று - தமிழ் இனப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு அரச தலைவர் ஒபாமா அவர்களையும், செயலர் ஹிலாறி கிளின்டன் அம்மையாரையும் கோரும் முழக்கங்களை எழுப்பினர்.

கனடாவிலருந்து 15,000 வரையிலான தமிழர்கள் ரொறன்ரோ ,வின்சர் ,ஒட்டாவா, மொன்றியல் ,கமில்ரன் , லண்டன் - ஒன்ராறியோ போன்ற நகரங்களிலிருந்து அமெரிக்காவின் 3 பிரதான் எலலைகளை கடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 75 க்குமதிகமான பேருந்துகளிலிலும் 600 க்குமதிகமான தனியார் சிற்றுந்துகளும் 8 மணித்தியாலயங்களினுள் அமெரிக்க எல்லையினுடு வோசிங்ரன் போவதாக கூறி சென்றிருந்ததாக அமெரிக்க குடிவரவு மற்றும் எல்லை போக்குவரவுகண்காணிப்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவரால் சுமார் 500 வரையிலான தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆழைத்துச்செல்லப்பட்டு வெள்ளைமாளிகையின் மிகவும் அண்மித்தபகுதிகளில் கோசங்களை எழுப்பியவாறு பேரணி நடாத்த அனுமதி கொடுத்திருந்தார்.



வன்னியில் நடக்கும் தமிழர் படுகொலையின் கோரக் காட்சிகள் கொண்ட படங்களைத் தாங்கியிருந்து பேரணியாளர்கள் -"இது சுத்தமான ஒரு இனப்படுகொலையே தான், இந்த போரை நிறுத்தி தமிழர்களைக் காப்பாற்றுங்கள்" என அமெரிக்க அரச தலைவரிடம் கோரிக்கைகளை எழுப்பினர்.

'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கொள்கையை தமிழினப் படுகொலை செய்வதற்கான ஒரு சாட்டாகவே சிறிலங்கா அரசு உபயோகிக்கின்றது என்ற கருத்தை பேரணியாளர்கள் வற்புறுத்தினர்.

தமிழீழ தேசியக் கொடிகளை தாங்கியிருந்த தமிழர்கள் - "விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் எமது சுதந்திரப் போராளிகள்" என முழக்கங்களை எழுப்பியதுடன் -"புலிகள் மீதான தடையை நீக்குங்கள்" என்று கோரும் அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.

பேரணியின் முடிவில் - அரச தலைவர் ஒபாமா அவர்களுக்கும், ஹிலறி கிளின்டன் அம்மையார் அவர்களுக்கும் வழங்கப்பட்ட மனு கடிதத்தில் - போர் நிறுத்தப்பட வேண்டிய உடனடித் தேவை வலியுறுத்தப்பட்டதுடன், நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய அவசியமும் எடுத்து விளக்கப்பட்டது.

நன்றி
செய்தி.காம்

Friday, February 20, 2009

தமிழ்வேந்தன் இறுதி ஊர்வலத்தில் கல்வீச்சு கலவரம்:போலீஸ் தடியடி



கடலூரில் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த தமிழ்வேந்தனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 6.45க்கு தொடங்கியது.


தமிழ்வேந்தன் வசித்த வண்டிப்பாளையம் குழந்தை காலணி பகுதியில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள உள்ள சுடுகாட்டுக்கு இந்த இறுதி ஊர்வலம் செல்கிறது.

இந்த ஊர்வலத்தில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஊர்வலத்தின் வழிநெடுகிலும் கார் மற்றும் டூவீலர்களை அடித்து உடைத்ததால் போலீசார் தடியடி நடத்துகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியபடியே உள்ளனர்.

இந்தக்கலவரம் 20 நிமிடங்களாக நடக்கின்றது. நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

நன்றி
நக்கீரன்

Thursday, February 19, 2009

மதுரையிலும் போலீஸ்-வக்கீல்கள் மோதல்




சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த வரலாறு காணாத மோதலை அடுத்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவலுக்கு நின்றிருந்த போலீசார்களை தாக்கி தங்களது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டனர்.

பதிலுக்கு போலீசாரும் திருப்பி தடியடி கொடுத்தனர். நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

இதனால் மதுரையில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

நன்றி:

நக்கீரன்


தினமலர்

ஐகோர்ட் கலவரம்: பலத்த காயத்துடன் தப்பினார் நீதிபதி




சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.


அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.


மோதல் சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட வழக்கறிஞர்கள் அங்கும் இங்கும் ஓடினர்.


நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.பின்னர் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர் வழக்கறிஞர்கள் சிலர்.

நன்றி;

நக்கீரன்

Wednesday, February 18, 2009

'புலிகள்': பிரணாப் பேச்சு-தமிழக எம்.பிக்கள் கொந்தளிப்பு; லோக்சபா ஸ்தம்பிப்பு!


- photo file copy

டெல்லி: இலங்கைப் பிரச்சினைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது என்று லோக்சபாவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அறிவித்தார். இதையடுத்து கோபமடைந்த பாமக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இருமுறை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பாக பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு, தாங்கள் பிடித்து வைத்துள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இலங்கையில் சண்டை ஓய்ந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரப்பகிர்வு அமல்படுத்தப்படவும், அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா உதவும்.

இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தம் முழு அளவில் அமல்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும். அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வு ஏற்படும்.

வடக்கு மாகாணத்தில் அமைதி திரும்ப அரசியல் சந்தர்ப்பம் இருப்பதாகவே இந்தியா கருதுகிறது. 13வது அரசியல் சட்டத் திருத்தம் இதற்கு முக்கியமானது. வடக்கு மாகாணத்தின் மறு சீரமைப்புக்கும், மறு வாழ்வுக்கும் இந்தியா உதவத் தயாராகவே உள்ளது.

இலங்கையில் அமைதி நிலவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் தொடர்ந்து இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.

இந்தியா மத்தியஸ்தம் செய்யாது

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இந்தியா மத்தியஸ்தம் செய்யவே செய்யாது. அதற்கான வாய்ப்பே இல்லை என்றார் பிரணாப் முகர்ஜி.

இதைக் கேட்டதும் பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் எழுந்து பிரணாப் பேச்சு திருப்தி தரவில்லை என்று கூறி அதிருப்தியை வெளியிட்டு, உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.

அவர்களை அமருமாறு கூறிய லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றால் தனியாக நோட்டீஸ் தருமாறு கூறினார். ஆனால் அதை ஏற்காமல் தொடர்ந்து பாமக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் கோஷமிட்டபடி இருந்ததால் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் சிறிது நேரம் கழித்து சபை மீண்டும் கூடியது. கூட்டத்தை துணைத் தலைவர் நடத்தினார். அப்போது பாமக எம்.பிக்கள், சபாநாயகர் இருக்கை முன்பு திரண்டு கோஷமிட்டனர்.

பத்திரிக்கை செய்திகளை காட்டி இலங்கையில் இனப்படுகொலை நடந்து வருகிறது. அதை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.

இதனால் மீண்டும் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

நன்றி: தட்ஸ்தமிழ்

புதுச்சேரி மாநிலம் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் மாபெரும் மனித சங்கிலி அறப்போராட்டம்







ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்தும் இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்தக்கோரியும் புதுச்சேரி மாநிலம் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் மாபெரும் மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது.

நேற்று (17.02.2009) மாலை 4.00 மணி முதல் 6.00 வரை பெருந்திரளான மக்கள் ஆதரவோடு புதுவையின் பிரதான சாலை எங்கும் எழுச்சியுர நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சிகளை கடந்து தமிழின உணர்வாளர்கள் மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் பங்கெடுத்து இலங்கைப்போரை உடனே தடுத்துநிறுத்தக்கோரியும், இந்திய அரசின் இராணுவ உதவியை திரும்பப்பெற கோரியும் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இலங்கைத்தமிழர் பாதுகாப்பு அமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவரும் பல்வேறு பகுதியில் பங்கெடுத்துக்கொண்டபடி புதுவை- கனகசெட்டிக்குளம் தொடங்கி கன்னியக்கோயில் வரை நீண்டிருந்த இந்த மனித சங்கிலியில் பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைககள், இந்திய பொதுவுடைமைக் கட்சி உட்பட பல்வேறு தமிழ் அமைப்பினரும் பங்கெடுத்தனர்.

போலீஸ் துரத்தல்.. கார் சேஸ்.. தப்பிய சீமான்!


புதுச்சேரி மாணவர்களுடன் சீமான்


நெல்லை: தன்னைக் கைது செய்ய காத்திருந்த போலீசாரிடம் இருந்து தப்பிய சீமான், காரில் ஏறிப் பறந்தார். அவரது காரை போலீசார் விரட்டிச் சென்று மடக்கியபோது அதில் சீமான் இல்லை. போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மாயமாகிவிட்டார்.

புதுச்சேரியில் நடந்த ஈழத் தமிழர்கள் ஆதரவு கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக இயக்குனர் சீமான் மீது புதுச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய முயன்று வருகின்றனர்.

ஆனால், அவர்களிடம் சிக்காமல் சாதுர்யமாக தப்பி வரும் சீமான் நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நேற்றிரவு நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ரகசியமாக நெல்லை வந்தார்.

அவர் எங்கு இருக்கிறார் என்று தமிழக போலீசே கண்டுபிடிக்க முடியாதபடி அவரது இருப்பிடம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

கூட்டம் தொடங்கும் வரை சீமான் வருவாரா என்பதே சந்தேகமாக இருந்தது. ஆனால், குறிப்பிட்டபடி வக்கீல்கள் புடைசூழ பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார் சீமான்.

இது குறித்து தமிழக போலீசார் புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தரவே அவர்கள் சீமானை கைது செய்ய நெல்லை போலீசாரின் உதவியை கேட்டனர். இதையடுத்து பொதுக் கூட்டம் முடிந்ததும் அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கூட்டம் நடத்தி முடிக்க இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் கடந்து 10.30 மணிக்கு பிறகும் கூட்டம் தொடர்ந்தது. இதனால் கூட்டத்தை உடனே முடிக்கச் சொல்லி வழக்கற்ஞர்களை போலீசார் நெருக்கினர்.

ஆனால், கூட்டம் முடிந்ததும் சீமானை கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதை அறிந்த வழக்கறிஞர்கள் சீமானை தப்பவைக்க முடிவு செய்தனர்.

பொதுக்கூட்ட மேடை அருகே 3 கார்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. கூட்டம் முடிந்ததும் வக்கீல்கள் மேடையை சுற்றி நின்று கொண்டனர். போலீசார் மேடைக்கு வர முடியாதபடி தடுப்பை ஏற்படுத்தினர்.

டைரக்டர் சீமான் காரில் ஏறியதும் 3 கார்களும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டன. இதில் சீமான் எந்தக் காரில் ஏறினார் என்பதைக் கூட போலீசார் பார்க்க முடியவில்லை.

இதை எதிர்பாராத போலீசார் சுதாரித்துக் கொண்டு 3 கார்களையும் 'சேஸ்' செய்தனர்.
ஆனால், பாளை பஸ் நிலையம், அங்கிருந்து புது பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, வண்ணார்பேட்டை, டவுன் என்று சென்ற அந்த கார்கள் குற்றாலம் ரோட்டில் சென்றவுடன் தனித்தனியாக பிரிந்து ஒவ்வொரு காரும் வெவ்வேறு திசையில் சென்றன.

இதில் தடுமாறிய போலீசார் ஒரு காரை பின் தொடர்ந்து குற்றாலம் வரை சென்றனர். மற்ற கார்களைப் பற்றி செக் போஸ்டுகளுக்கு தகவல் கொடுத்தனர். குற்றாலம் சென்ற காரை போலீசார் மடக்கி சோதனையிட்டபோது அதில் சீமான் இல்லை.

அதே போல மற்ற இரு கார்களையும் போலீஸ் சோதனைச் சாவடிகளில் சோதனையிட்டபோது அவற்றிலும் சீமான் இல்லை. அவர் வழியிலேயே வேறு காருக்கு மாறி எங்கோ போய்விட்டார்.

இந்தக் கூத்து நள்ளிரவு 3 மணி வரை நடந்தது.

தற்போது அவர் மதுரையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நன்றி:
http://thatstamil.oneindia.in/news/2009/02/18/tn-how-seeman-escaped-from-polic.html

Saturday, February 14, 2009

புதுச்சேரி-மத்திய அரசுக்கு எதிராக நாளை உண்ணாவிரதம்

க.அருணபாரதி



இலங்கை அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போருக்கு இந்தியா உதவுவதைக் கண்டித்து புதுச்சேரியில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து சத்தியம் மக்கள் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈழத் தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்கும் நோக்கோடு சிங்கள இனவெறி அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போருக்கு இந்திய அரசு உதவுவது படுபாதகச் செயலாகும்.

இந்திய அரசின் இப்போக்கைக் கண்டிக்கும் வகையிலும், சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போரை உடனே நிறுத்துமாறு வலியுறுத்தியும், தமிழீழ மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும் கோரிக்கை விடுத்து நாளை (15ம் தேதி) புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை அருகில் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் க.அருணபாரதி தலைமை தாங்குகிறார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் நிறுவனத் தலைவர் தே.சத்தியமூர்த்தி முன்னிலை வகிக்கிறார். அவைத் தலைவர் தே.சரவணன் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து பேசுகிறார்.

சத்தியம் மக்கள் சேவை மையத்தின் செயலாளர் சசிகலா ஆறுமுகம், துணைச் செயலாளர் க.ஆனந்த், பொருளாளர் தே.சந்தோஷ் உள்ளிட்ட இயக்க நிர்வாகிகளும், பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக நல இயக்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் கண்டன உரை நிகழ்த்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 9362141055, 9841949462
இணையம்: http://sathiyapuratchi.blogspot.com

நன்றி
http://thatstamil.oneindia.in/news/2009/02/14/tn-tamils-to-go-on-fast-puducherry-against-centre.html

Friday, February 13, 2009

இலங்கை போர் நிறுத்தம்-புதுச்சேரி மாணவ‌ர்க‌ள் சாகும் வரை உ‌‌ண்ணா‌விரத‌ம்!



இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த வ‌லியுறு‌த்‌தி புது‌ச்சே‌ரி‌யி‌ல் பார‌தியா‌ர் ப‌ல்கலை‌க் கழக மாணவ‌ர்க‌ளு‌ம், டா‌க்ட‌ர் அ‌‌ம்பே‌த்க‌ர் அரசு ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்களு‌ம் 2வது நாளாக சாகு‌ம்வரை உ‌ண்ணா‌விரத‌ப் போர‌ா‌ட்ட‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

இல‌‌ங்கை அரசு‌க்கு இ‌‌ந்‌திய அரசு ஆயுத ‌உத‌வி செ‌ய்ய‌க் கூடாது‌ம் எ‌ன்று‌ம், இலங்கையில் உடனே போ‌ர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்ய‌ வே‌ண்டு‌ம் எ‌ன்றும் தமிழகம் முழுக்க கடந்த சில தினங்களாக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம், உண்ணா விரதம் மேற்கொண்டனர். இனால் தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகள் கூட தற்காலிகமாக முடும் அளவுக்கு நிலைமை மோசமானது.

இதையடுத்து மீண்டும் கல்லூரிகள் கடந்த 16ம் திறக்கப்பட்டன.

இந் நிலையில், புதுச்சேரி மாணவர்களும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணா நிலை போராட்டத்தில் குதித்துள்ளனர்.

புது‌ச்சே‌ரி‌யி‌ல் பார‌தியா‌ர் ப‌ல்கலை‌க் கழக மாணவ‌ர்க‌ள், டா‌க்ட‌ர் அ‌‌ம்பே‌த்க‌ர் அரசு ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்களு‌ம் 2-வது நாளாக சாகு‌ம்வரை உ‌ண்ணா‌விரத‌ப் போர‌ா‌ட்ட‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.


இந்த உ‌ண்ணா‌விரத போராட்டத்திற்கு திரைப்பட இய‌க்குன‌ர் சீமா‌ன் ‌வா‌ழ்‌த்து தெரிவித்துள்ளார்.

நன்றி
http://thatstamil.oneindia.in/news/2009/02/13/tn-lanka-students-on-hunger-strike-in-puducherry.html#cmntTop

Sunday, February 8, 2009

மாவீரன் முத்துகுமாரின் இறுதி பயணம் தொகுப்பு செய்தி





ஜனவரி 31, சனிக்கிழமை காலை நான் மீண்டும் கொளத்தூரில் கால்வைத்தபோது, “வீரவணக்கம்.. வீர வணக்கம்.. எங்கள் முத்துக்குமாருக்கு வீர வணக்கம்..” என்ற கோஷம் பிரதான சாலையில் வரும்பொழுதே கேட்டது. கூட்டம் நேற்றைய தினத்தைவிட சற்று அதிகமாகவே காணப்பட்டது.

30-ம் தேதி இரவே போலீஸார் அதிக அளவில் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர். விசாரித்துப் பார்த்ததில், இன்றைக்கு இரவே வலுக்கட்டாயமாக சடலத்தைத் தூக்கிச் செல்ல போலீஸாருக்கு ஒரு எண்ணம் இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. கூட்டம் குறைவதற்காக போலீஸார் காத்திருப்பதாகவும் செய்தி வந்தது. இதனால் பல்வேறு பத்திரிகையாளர்களும் இரவு நேரத்தில் அங்கேயே இருந்தார்கள். ஆனால் இரவு 1.30 மணிவாக்கில் சேலத்தில் இருந்து வந்து சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்களின் கூட்டத்தை பார்த்துதான் போலீஸார் தங்களது திட்டத்தை மாற்றிக் கொண்டுவிட்டதாக இரவுப் பணியில் இருந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தார்கள்.

சென்னையில் ஒரு காவல் நிலையம் விடாமல் அனைத்து சப்-இன்ஸ்பெக்டர்களும், இன்ஸ்பெக்டர்களும், காவலர்களும் இங்கே பாதுகாப்புப் பணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். கூடுதல் பாதுகாப்புக்காக ஆவடி பட்டாலியணில் இருந்து அதிரடிப் படையினரை தருவித்திருந்தார்கள். ஆனாலும் உள்ளே வராமல் சமர்த்துப் பிள்ளையாக பிரதான சாலை அருகிலேயே நின்றிருந்தார்கள் காவல்துறையினர்.

தமிழகத்தில் இத்தனை அமைப்புகள் உள்ளனவா என்று ஆச்சரியத்தை அளிக்கும்வகையில் பல்வேறு இளைஞரணி அமைப்புகளும் ஒன்று கூடி திரண்டிருந்தார்கள். அதிலும் அவர்கள் சமர்ப்பித்த அஞ்சலி குறிப்புகள் ஒவ்வொன்றும், ஒவ்வொருவிதமாக தமிழில் விளையாடியிருந்தன.

மேடைக்கு நேர் கீழே நூற்றுக்கணக்கானோர் நெருக்கடியில் நின்று கொண்டிருக்க ஒரு அமைப்பைச் சேர்ந்த பெண் தொகுப்பாளராக இருந்து ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். இதுவும் கொஞ்ச நேரத்துக்குத்தான். அடுத்து யாராவது ஒருவர் கையில் ஒலிபெருக்கி சென்றடைய மேடை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு போய்க் கொண்டிருந்தது.

முத்துக்குமார் இறந்து 36 மணி நேரம் கழித்து அஞ்சலி அறிக்கையை வெளியிட்ட கலைஞரை போட்டு காய்ச்சி எடுத்தார்கள் பேச்சாளர்கள். அவர்களுடைய கோபத்திற்கு இன்னுமொரு காரணம், அவருடைய தவப்புதல்வர் அழகிரி இந்தச் சோகத்திலும் மதுரையில் நேற்று தனது பிறந்த நாள் கொண்டாடியதையும், அதற்கு கலைஞர் நேற்று காலையில் வாழ்த்து சொல்லியிருப்பதையும் குறிப்பிட்ட ஒருவர் “இதுக்கெல்லாம் நேரமிருக்குய்யா நம்ம பெரிசுக்கு..!” என்று தாளித்துவிட்டார்.

இன்னொருவர் “முதலில் கலைஞர் என்கிற பட்டத்தையே அவரிடமிருந்து பிடுங்க வேண்டும்..” என்கிற அளவுக்குப் பேசினார். கலைஞரை மட்டுமே விமர்சித்தால் அது நிறைவு பெறாது என்பதனால் கூடவே ஜெயலலிதாவையும் இழுத்துக் கொண்டார்கள். “அந்தக் கட்சிக்காரன்கிட்ட யாழ்ப்பாணம் எங்க இருக்குன்னு கேட்டுப் பாருங்க.. ‘அதெல்லாம் எங்கம்மாவுக்குத்தான் தெரியும்'பான்.. அந்த அளவுக்கு அறிவு சூனியங்கள் உள்ள கட்சி அது.. அவர்களையா நாம் நம்பியிருப்பது..?” என்று தத்துவார்த்த ரீதியாகவெல்லாம் சிந்திக்க வைத்தார்கள் பேச்சாளர்கள்.

ஒரு உதவி இயக்குநர் பேசும்போது “முத்துக்குமாரின் உடலை மூலக்கொத்தளம் சுடுகாட்டிற்கு கொண்டு போகக்கூடாது.. கடற்கரைக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும்.. அங்குதான் புதைக்கப்படுதல் வேண்டும்” என்று ஆவேசப்பட்டார். “அங்கே புதைக்கப்பட்டவர்களைவிட முக்கியமானவன் நமது முத்துக்குமார்தான்..” என்றார். கரவொலியில் கொஞ்சம் ஆவேசமும் கலந்திருந்தது.

நேரம் ஆக, ஆக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களின் கிளைப் பிரதிநிதிகள் சாரை, சாரையாக வந்த வண்ணம் இருந்தார்கள். வரும்போதே ‘வேல்! வேல்! வெற்றிவேல்!' போன்று “வீர வணக்கம்..! வீர வணக்கம்..!” என்ற கோஷம் காதைப் பிளந்தது. இந்த மாதிரியான அமைப்புகள் பற்றி எனக்கு சரியான அறிமுகம் இல்லாததால், இந்த கோஷம் ஒரு வேளை இவர்களது தனிப்பட்ட முழக்கச் சின்னமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒரு கட்டத்தில் முத்துக்குமாரை தரிசிப்பதற்காக சுமார் 300 பேராவது நீண்ட கியூவில் காத்திருந்தபோது இளைய சமுதாயத்தினரின் இன்றைய மனவோட்டத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ் ஈழ ஆதரவு முன்னணி, பிளாக் பந்தர்ஸ், பெண்கள் எழுச்சி இயக்கம், மக்கள் விடுதலை இயக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம், புரட்சிகர மாணவர் இலக்கிய முன்னணி, புரட்சிகர ஜனநாயக மாணவர் கழகம், தமிழ் ஈழ ஆதரவு முன்னணி, தனித்தமிழ்நாட்டுக்கான மாணவர் முன்னணி, தமிழ் புலம்பெயர் வாழ் மக்கள் அமைப்பு, ஈழத்து சகோதரர்கள் பாரீஸ்-பிரான்ஸ் அமைப்பு என்று புதிய, புதிய இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், தோழியர்களும் தத்தமது தமிழகத்து பிரதிநிதிகளோடு ஆஜராகியிருந்தனர். இன்னும்கூட நிறைய இயக்கத்தினர் வந்திருந்தார்கள். பெயரை மறந்துவிட்டேன்.

இந்த இயக்கத்தினர் அனைவருமே முத்துக்குமார் பற்றிய பல்வேறு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். அதை வாங்கவும் ஒரு கூட்டம் ஆலாய்ப் பறந்தது. வெளிச்சத்துக்கு வராத கவிஞர்கள் பலரும், முத்துக்குமார் பற்றி கவிதை எழுதி அதை உடனுக்குடன் அச்சிட்டு கொண்டு வந்திருந்தார்கள். தமிழ் ஈழம் பற்றிய புத்தகங்களும் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. அதிலும் முத்துக்குமார் கடைசியாக வாசித்த இராசேந்திர சோழன் எழுதிய ஈழம் பற்றிய புத்தகம் கொண்டு வந்த சில நிமிடங்களிலேயே காலியானது.

கலைஞர், ஜெயலலிதா, சோ, ஹிந்து ராம் ஆகியோரைப் பற்றி பல விமர்சனத் தட்டிகள் பலவிடங்களிலும் காணக் கிடைத்தன.

நான்கு தன்னார்வத் தொண்டர்கள் கிட்டத்தட்ட 1 மணி நேரம் அந்த வேகாத வெயிலில் பிரபாகரனைப் பாராட்டி எழுதியிருந்த போஸ்டர்களை தூக்கிக் காட்டிய நிலையில் நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு அமைப்பினர் தனி ஈழ நாட்டுக்கு ஆதரவு கேட்டு கையொப்பம் வாங்கிக் கொண்டிருந்தனர். 3 மணி நேரத்தில் அவர்கள் கொண்டு வந்த விண்ணப்பப் படிவங்கள் அனைத்துமே நிரம்பிவிட.. இதற்கு மேல் கையொப்பமிட தாள் இல்லாமல் நின்றது ஆச்சரியம்தான்..

வந்திருந்த பொதுஜனங்களின் ஒரேயொரு முக்கியமான கருத்து, ‘முத்துக்குமார் எதையும் எழுதி வைக்காமல் இறந்து போயிருந்தால், நிச்சயம் இந்த அளவுக்கு எழுச்சி ஏற்பட்டிருக்காது' என்பதுதான். அவர் எழுதி வைத்திருந்த ‘மரண சாசனம்'தான் தமிழக இளைஞர்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் ஈழம் பற்றிய ஒரு எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது. “அந்த சாசனத்தை எத்தனை முறை படித்தாலும் சலிக்கவில்லை ஸார்..” என்றார் ஒரு நண்பர். இதையே நான் சந்தித்த பல நண்பர்களும், பொதுமக்களும் திருப்பித் திருப்பிச் சொன்னார்கள். எனக்கும் இது சரியென்றுதான் தோன்றுகிறது.

மீண்டும், மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.. மிக மிக துல்லியமாக, ‘இதுதான் காரணம்.. இவர்கள்தான் காரணம்.. இதைத்தான் எழுதுகிறேன்..' என்று கொஞ்சம்கூட தடம் மாறாமல் நேர்த்தியான வார்த்தைகளின் கட்டமைப்பில் சிறிதுகூட சலிக்க வைக்காமல், உள்ளடக்கத்தில் கேள்வி எழுப்ப முடியாதவாறு ஒரு தேர்ந்த எழுத்தாளனின் உச்சக்கட்ட படைப்பு போல் எனக்குத் தோன்றுகிறது.

தம்பி முத்துக்குமரன் திரைப்படத் துறையில் முழு மூச்சுடன் நுழைந்திருந்தால் நிச்சயம் சாதித்திருக்கலாம். எழுதுவதோடு மட்டுமல்லாமல் பேசும்போதுகூட ஆங்கிலம் கலக்காமல் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் இவர். இதனால்தான் திரைப்படத் துறையின் மாயக்கண்ணாடியை உடைத்துக் கொண்டு இவரால் உள் நுழைய முடியவில்லை என்றார்கள் இவருடன் திரைப்படத் துறையில் பணியாற்றிய நண்பர்கள்.

நேரம் ஆக, ஆக கூட்டம் கூடிக் கொண்டே போக அந்த இடமே ஒரு கொதிப்பான சூழலில் காட்சியளித்தது. ஒலிபெருக்கி பிடித்து பேசுகின்ற அனைவருமே உணர்ச்சி கொந்தளிப்பில், “இப்போதே ஈழத்துக்கு போகத் தயார்..” என்கிற ரீதியிலேயே பேசி உணர்ச்சிகள் கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொண்டார்கள். ஒவ்வொரு பேச்சாளருக்கும் இடையிடையே ‘வீர வணக்கம்' என்று கோஷம் எழுப்பவும் மறக்கவில்லை.

மேடையேறி முத்துக்குமாரை தரிசித்த ஒவ்வொரு அமைப்பினரும் சடலப் பெட்டியைச் சுற்றி நின்று கைகளை உயர்த்தி “வீர வணக்கம்..! வீர வணக்கம்..!” என்று கோஷம் போட்டுவிட்டுத்தான் இறங்கினார்கள்.

இடையில் சில மாணவர்கள் திடீரென்று சோனியாவின் கொடும்பாவியை பிரதான சாலைக்குத் தூக்கி வந்து போட்டவுடன் பரபரப்பு கூடியது. இதனை எப்படி அணுகுவது என்று போலீஸார் சிறிது யோசிக்கத் துவங்க.. அதையே ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு கொடும்பாவியை எரித்தது மாணவர்கள் கூட்டம். இங்கேயும் “வீர வணக்கம்.. வீர வணக்கம்..” என்ற கோஷம் கொப்பளிக்க.. மாணவர்களின் கோபமும், ஆத்திரமும் அடுத்து ‘ஹிந்து' ராம் மீது பாய்ந்தது. தொடர்ந்து ‘ஹிந்து' பத்திரிகையும் சேர்த்து எரிக்கப்பட்டது.

யார் சொன்னால் இவர்கள் கேட்பார்கள் என்பது தெரியாமல் போலீஸார் தயங்கி நிற்க.. பிரதான சாலையின் இரு புறமும் போக்குவரத்து தேங்கி நின்றது. போலீஸாருடன் மல்லுக்கட்டுக்குத் தயார் என்ற நிலையில் அவர்கள் காட்சியளித்தபோது சிலர் கெஞ்சி கூத்தாடி அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துப் போனார்கள்.

போகப் போக ஒலிபெருக்கியில் பேச்சாளர்கள் வாய்க்கூசும் பேச்சுக்களையெல்லாம் சரளமாக அள்ளி வீசத் துவங்கினார்கள். சிறிது நேரத்திற்கு கலைஞரை விட்டுவிட்டு சோனியாகாந்தி, ஜெயலலிதா, சோ, ராம் என்று இந்த நால்வரைப் பற்றியும் அலசி, ஆராய்ந்து, துவைத்து எடுத்துவிட்டார்கள். இதில் பலவற்றை நான் எழுதினால் நீங்களே அடிக்க வருவீர்கள்.. இது போன்ற பேச்சுக்கள் அக்கம்பக்கம் நின்றிருந்த பொதுவானவர்களையும் முகம் சுழிக்க வைத்தது. ஆனால் ஒலிபெருக்கியை ஒவ்வொருவரிடமிருந்து பிடுங்குவதற்குள் அந்தத் தொகுப்பாளர் பெண்மணி ரொம்பவே பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.

அந்தத் தெரு முழுக்கவே இப்படியொரு சூழலை இதுவரையில் சந்தித்திருக்காததால் நேற்று அனைத்து வீடுகளின் உட்புறங்களிலும் பொதுமக்களை நிற்க அனுமதித்திருந்தார்கள். கூட்டம் அப்படியே சேர்ந்து கொண்டே போகவே எங்கெல்லாம் நிழல் கிடைக்கிறதோ அங்கெல்லாம் நின்றபடியே காத்திருந்தது கூட்டம்.

மேடைக்கு வந்த முத்துக்குமாரின் பாட்டி தனது பேரனைப் பற்றிப் பெருமையாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அவரைக் கட்டிப் பிடித்து ஒரு கூட்டம் அழத் துவங்க.. அவர்களை அடிக்காத குறையாக விரட்டிய மேடை நிர்வாகிகள்.. பாட்டியிடமே, “பாட்டி நீங்க அழுகக்கூடாது.. உங்க பேரன்தான் உண்மைத்தமிழன்.. அவன் செய்த செயலுக்காக சந்தோஷப்படுங்க..” என்று தங்களது கொள்கையை அவரிடம் புகுத்திக் கொண்டிருந்தார்கள்.

என்ன இருந்தாலும் அவர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவராச்சே.. சிறிது நேரம் மெளனமாக இருந்தவர், யாராவது பெண்கள் வந்து அவரைத் தொட்டவுடனேயே கதறினார். அவரது நெருங்கிய உறவினர்கள் அவரைச் சூழ்ந்து உட்கார்ந்து கொண்டிருக்க பேரனைப் பற்றிய பல நினைவுகளை திரும்பித் திரும்பி சொல்லிக் கொண்டேயிருந்தார்.

தமிழகத்தின் பல்வேறு அகதி முகாம்களிலிருந்தும் ஈழத் தமிழர்கள் வந்திருந்தார்கள். அதிலும் ஈழத்துப் பெண்கள் தங்கள் வீட்டுச் சாவு போல் கதறியழுதது அந்த நிமிடத்தில் மனதை என்னவோ செய்தது.. முகாம்களிலிருந்தும் சென்னை வருவதற்கான அனுமதி கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருந்ததாக சிலர் தெரிவித்தார்கள்.

சொந்த நாட்டு மக்களைவிட ஈழத்து மக்களே அதிகம்பேர் இன்று வந்திருப்பதாக ஒருவர் ஒலிபெருக்கியில் சொல்லி “இப்ப சத்யம் தியேட்டர்ல போய் பாருங்க.. எத்தனை பரதேசி நாயுங்க நுனி நாக்குல இங்கிலீஷ் பேசிட்டு கியூவுல நிக்குறானுகன்னு.. அவனுகளுக்கு கொஞ்சமாச்சும் தமிழ், தமிழன்னு ஒரு எண்ணம் இருந்திருந்தா அங்க போயிருப்பானா..? சினிமாக்காரனுங்க வர்றானுங்க.. மாலையைப் போடுறானுங்க.. போஸ் கொடுக்குறானுங்க.. அவனுகளுக்காச்சும் தோணிருக்க வேண்டாம்..? எங்க வீரன் முத்துக்குமாரைவிட உங்களுக்கு தியேட்டர் காசு முக்கியமாடா.. கபோதிகளா..?” என்று ஆரம்பிக்க கைதட்டல் பற்றிச் சொல்லவா வேண்டும்.. இதற்கு மேல் பேசியதை எழுத முடியாது..!

பேச்சாளர்களில் ஒரு சிலர் ஆவேசமும், கொந்தளிப்புமாக பேசினாலும் சிலர் நன்றாகவே கருத்துக்களை எடுத்துரைத்தார்கள். அன்றைக்கு எந்தத் தொலைக்காட்சியுமே முத்துக்குமாரின் மரணத்தை கண்டு கொள்ளவில்லை என்பது அங்கு கூடியிருந்த அனைத்து மக்களுக்குமே ஒரு ஆதங்கத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியிருந்தது. இதனைக்கூட ஒருவர் சுட்டிக் காட்டிப் பேசினார்.

“நேற்று முத்துக்குமாரின் மரணச் செய்தியைவிட, இந்த அஞ்சலி நிகழ்ச்சிகளைவிட தமிழகத்து மக்களுக்கு ‘மானாட மயிலாட'தான் முக்கியமா..? ஒரு நிமிடம் அஞ்சலி நிகழ்ச்சியை காட்டுகிறீர்களே.. பாவிகளா..? உங்களுடைய இந்த சொகுசு நிலைமைக்கு, அன்றைக்கு உங்களுக்காக செத்துப் போன எத்தனையோ அப்பாவிகள்தானே காரணம்.. இந்தத் தமிழ்தானே காரணம்.. இந்தத் தமிழன்தானே காரணம்.. “ என்று உருக்கமாகப் பேசிவிட்டுப் போனார் ஒருவர். விமர்சனத்திற்கு சன் டிவியும் தப்பவில்லை. முரசொலி மாறன் இறந்தபோது சன் டிவி செய்ததை எடுத்துக் காட்டிப் பேசினார் இன்னொருவர். “இவர்கள் வீட்டில் சாவு நடந்தால்தான் அது எழவு.. மற்றவர்கள் வீட்டில் நடந்தால் அது ஒண்ணுமில்லை.. இதுதான்யா இவனுக யோக்கியதை..” என்று பொரிந்தார் இன்னொருவர்.

இடையில் பிரபாகரன் முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து செய்தி அனுப்பியிருப்பதாக, ஒலிபெருக்கியில் சொல்லப்பட கரவொலி கொளத்தூரை அதிர வைத்தது.

பேச்சாளர்கள் சூட்டைக் கிளப்பிக் கொண்டிருந்தாலும் சில இயக்கத்தினர் போலீஸாரின் சூட்டைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். மறுபடியும் சோனியாவின் உருவ பொம்மை என்பதைப் போல் வைக்கோலும், சாக்குப் பையும் சேர்த்து ஒரு உருவத்தைத் தயாரித்து அதனை ஒரு சிறுவனின் கையில் கொடுத்து, அதனை செருப்பால் அடித்தபடியே வர.. அந்த சிறுவனை ஒரு நபர் தனது தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஓடி வர.. கூட்டம் பிரதான சாலை நோக்கி வருவதை பார்த்துவிட்ட காவல்துறையினர் இந்த முறை முந்திக் கொண்டனர்.

காவல்துறை மாணவர்களை சாலைக்கு முன்பாக உள்புறமாகவே மறித்து நின்றுவிட மாணவர்கள் ஆவேசப்பட்டார்கள். தள்ளுமுள்ளு நடந்தது. நிஜமாகவே கலவரச் சூழல் அப்போது காணப்பட்டது. பட்டாலியன் காவலர்கள் கூட்டத்தை முன்னேறவிடாமல் தடுக்க மாணவர்கள் சென்றே தீருவோம் என்று அவர்களை தள்ளிவிட.. தள்ளுமுள்ளு நடந்தது. இடையில் சில மாணவர்கள் பின்புறமிருந்து கற்களையும், செருப்புக்களையும் போலீஸார் மீது வீச துவங்க.. சிலர் சிதறி ஓடினார்கள். எப்படியும் தடியடிதான் என்று நினைத்து பெரும்கூட்டம் பயத்துடன் பார்த்தபோது அப்போது பார்த்து தோழர் சி.மகேந்திரனும், பெரியவர் பழ.நெடுமாறனும் வந்துவிட.. கூட்டம் அவர்களிடம் புகார் செய்தது.

போலீஸாரும் பதிலுக்கு அவர்களிடம் பேச.. பழ.நெடுமாறன் அவர்களைச் சமாதானம் செய்து “ரோட்டுக்கு போகாதீங்க.. இங்கேயே எரிங்க.. அவங்க டூட்டிய பார்க்க விடுங்க..” என்று காலில் விழுகாத குறையாக கெஞ்சி அவர்களை அழைத்துச் சென்றார். ஆனாலும் சில மாணவர்கள் விடவில்லை.. “ரோட்டுக்கு அந்தப்புறம்தான் போலீஸ் நிற்க வேண்டும். உள்ளே வரக்கூடாது. திரும்பிப் போ.. திரும்பிப் போ..” என்று ஆவேசமாகக் கத்த.. அப்போதைக்கு மோதலைத் தவிர்க்க வேண்டி போலீஸார் பின் வாங்கினார்கள்.

கட்டுப்பாடும், கண்ணியமும் காக்கப்பட வேண்டும் என்று அங்கு கூடியிருந்த கூட்டத்தினரிடையே வைகோவும், தலைவர்களும் பல முறை சொல்லியும் உண்மையில் யாரும், யாரையும் கட்டுப்படுத்த முடியாத நிலைதான் தென்பட்டது.

வெள்ளிக்கிழமையே இரண்டு அமைப்பினருக்கு இடையில் மோதலும், கைகலப்பும் மேடைக்குப் பின்புறத்தில் நடந்தது. வர்த்தக் சங்கத் தலைவர் வெள்ளையன்தான் ஓடி வந்து அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

ஒரு குழுவினர் தெரு நாடகம் போல் ஒன்றை அரங்கேற்றினார்கள். சிங்கள ராணுவத்தின் கொடுமைகளைப் பற்றியும் இன்றைய அரசியல் சூழல் பற்றியும் அதில் தேர்ந்த நடிகர்களைப் போல் நடித்தது ஆச்சரியமளித்தது.

இன்னொரு குழு நல்லது செய்வதாக நினைத்து தங்களுக்குத் தாங்களே சூனியம் வைத்துக் கொண்டார்கள்.

டிவி டுடே என்ற சேனல்காரர்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும் வாகனத்தை தெரு முனையில் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்து நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஒரு மணிக்கான மதியச் செய்திகளில் இது நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. வந்திருந்த கூட்டத்தினரை அழைத்து பேட்டியும் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு கூட்டம், “உங்களுக்கு இங்க என்னடா வேலை..? ஐ.ஐ.டி. பிரச்சினை, வேணுகோபால் பிரச்சினை, மண்டல் கமிஷன் பிரச்சினைன்னு எல்லாத்துலேயும் எங்களுக்கு எதிரா நாள் முழுக்க பிரச்சாரம் பண்ணியது நீங்கதாண்டா.. வெளிய போங்கடா..” என்று கத்திக் கூப்பாடு போட்டு, வண்டியைத் தாக்கவும் செய்ய.. பட்டென்று நேரடி ஒளிபரப்பை நிறுத்திவிட்டு அமைதியானது அந்த நிருபர் குழு.

இடையில் புகுந்த தமிழகத்து பத்திரிகையாளர்கள் சிலர், “இவங்க ஒருத்தராச்சும் நேரடி ஒளிபரப்பு பண்ணிக்கிட்டிருக்காங்க.. ஏன் கெடுக்குறீங்க?” என்று உரிமையுடன் கண்டிக்க கூட்டம் அவர்களையும் “கைக்கூலிகள்..” என்று திட்டத் துவங்க.. நமது பத்திரிகையாளர்கள் கவுரவமாக ஒதுங்கிக் கொண்டார்கள். வேறென்ன செய்வது..?

மேடைக்குக் கீழே இருப்பவர்களை ஒழுங்கு செய்ய வந்த வெள்ளையனையே ஒரு கட்டத்தில் வெளியேறச் சொன்னது கூடியிருந்த கூட்டம். பாவம் மனிதர் நொந்து போனார்.. இந்த மூன்று நாள் செலவுகள், மற்றும் ஏற்பாடுகள் முழுவதையும் பார்த்து, பார்த்து செய்தது அவர்தான்.. அவருக்கே இந்த கதி..!

வைகோ, பழ.நெடுமாறன், சி.மகேந்திரன், திருமாவளவன், நல்லகண்ணு ஆகியோர் வந்து சேர்ந்த பின்பு இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் மணிவண்ணன், அமீர், சீமான், சேரன், மன்சூரலிகான் என்று பிரமுகர்களும் வரிசையாக வர.. பின்பு ஒலிபெருக்கி ஓயாமல் உழைத்தது.

வைகோவைவிட சீமானுக்கு பெரும் வரவேற்பு காத்திருந்தது. சீமானும் தன் பேச்சில் வெளுத்துக் கட்டினார். “உலகத்திலேயே வாழ முடியாமல் செத்துப் போன ஒரு இனம் என்கிற பெயராவது என் தமிழ் இனத்திற்குக் கிடைக்கட்டும்.. அதைத்தான் இப்போதைய மத்திய சர்க்காரும், மாநில அரசும் விரும்புகிறது..” என்று ஆவேசப்பட்டார்.

வைகோ பேசும்போது “கண்ணியமும், கட்டுப்பாடும் மிக, மிக முக்கியம்.. மாணவச் செல்வங்களே தயவு செய்து கட்டுப்பாட்டைக் கடை பிடியுங்கள். அதுதான் முத்துக்குமாருக்கு நாம் செய்யும் ஒரு நன்றிக் கடன்..” என்றார். வைகோ பேசத் துவங்கியபோது இடையூறுகளும் தொடர்ந்தன. ஒருவர் திடீரென்று எழுந்து ஏதோ கேள்வி கேட்க மனிதர் பதட்டமாகிவிட்டார். “நீ இங்க வந்து பேசு.. நான் அங்க போறேன்.. யாராவது ஒருத்தர்தான் பேசணும்..” என்று கோபப்பட்டார்.

நெடுமாறனும், திருமாவும்கூட “மாணவர்கள் எந்தவிதத்திலும் உணர்ச்சிவசப்படக்கூடாது.. ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதமும் நிகழக் கூடாது.. அது நமது போராட்டத்தினை திசைதிருப்பிவிடும்” என்று திருப்பித் திருப்பி அறிவுறுத்தினார்கள்.

“மூன்று மணிக்காவது தூக்குவார்களா..? இல்லாட்டி நாளைக்குத்தானா?” என்று உளவுத்துறை போலீஸார் பத்திரிகையாளர்களிடம் நைச்சியமாக பேசி செய்திகளை பெற்றுக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் ஏற்பாட்டாளர்கள் இறுதி யாத்திரை பற்றி கவலையில்லாமல் இருக்க இந்த சந்தேகம் அனைவருக்கும் வந்துவிட்டது. ஆனாலும் வைகோவும், திருமாவும் வந்த பின்பு இறுதி யாத்திரை வேன் மின்னல் வேகத்தில் தயாரானது.

அலங்கரிக்கப்பட்ட ஒரு வேன் முத்துக்குமாரின் சடலத்தை ஏற்க தயாராகி வந்தது. வேனின் முகப்பு பகுதியில் பிரபாகரனின் புகைப்படமும், தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னம் இருந்த போஸ்டரும் வைக்கப்பட்டது. தலைவர்கள் சடலத்தின் அருகில் வந்து ஒரு முறை ‘வீர வணக்கம்' செலுத்திய பின்பு மாணவர்கள் கரகோஷத்திற்கிடையில் சடலம் மேடையிலிருந்து தூக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்டது.

தலைவர்கள் முன்னால் நடக்க வேண்டும் என்பதனால் முன்னதாகவே அங்கிருந்து வெளியேறினார்கள். பாரதிராஜா கையில் அடிபட்டிருந்ததாலும், மணிவண்ணன் சரிவர நடக்க முடியாமல் இருந்ததாலும் உடனடியாக கிளம்பிவிட்டார்கள். அமீர் வேனின் பின்புறத்தில் ஏறிக் கொண்டார். சேரன் கூட்டத்தோடு கூட்டமாக நடக்கத் துவங்க..

கூடியிருந்த கூட்டம் நிச்சயம் 10000 பேரைத் தாண்டியிருக்கும் என்பது போலீஸ் செய்தி என்பதால் அவர்களும் எதற்கும் தயாராகவே வந்திருந்தார்கள்.

ஊர்வலத்தின் முகப்பிலேயே கண்ணீர் புகை குண்டு வீசும் வஜ்ரா வாகனம் செல்ல.. அதற்குப் பின்னே அதிரடிப் படை போலீஸார் செல்ல இதன் பின் விடுதலைச் சிறுத்தைகள் பேனரை பிடித்தபடி நடக்கத் துவங்க முத்துக்குமாரின் இறுதி பயணம் மிகச் சரியாக 3.40 மணிக்கு கொளத்தூர் பிரதான சாலையிலிருந்து கிளம்பியது.

கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர்கள். என் வாழ்க்கையில் இத்தனை தூரத்தை முதல் முறையாக இப்போதுதான் நடந்து சென்றுள்ளேன்.

ஊர்வலத்தில் வைகோவும், திருமாவும் நடந்து வந்து கொண்டிருக்க.. ஒவ்வொரு இயக்கத்தினரும் ஒவ்வொரு பிரிவு, பிரிவாக கோஷங்களை எழுப்பியபடியே வந்தனர்.

“சோனியா ஒழிக..
இத்தாலிக்காரி சோனியா ஒழிக..
பாப்பாத்தி ஜெயலலிதா ஒழிக..
பார்ப்பன சோ ஒழிக..
கொல்லாதே கொல்லாதே..
மத்திய அரசே
தமிழீழ மக்களைக் கொல்லாதே..
வெல்லட்டும் வெல்லட்டும்
தமிழீழம் வெல்லட்டும்
விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
இன ஒடுக்குமுறைக்குத் துணை நிற்கும்
பார்ப்பன கும்பலை விரட்டியடிப்போம்
ஜெயலலிதா, சோ, சுப்ரமணியசாமி
இந்து ராம், துக்ளக் சோ
பார்ப்பன கும்பலை துரத்தியடிப்போம்
கருவியாக்கும் கருவியாக்குவோம்
முத்துக்குமாரின் நினைவேந்தலை
கருவியாக்குவோம் கருவியாக்குவோம்
எங்கள் தலைவன் பிரபாகரன் வாழ்க..
தமிழர் தளபதி பிரபாகரன் வாழ்க..
விடுதலைப்புலிகள் வாழ்க..
தமிழ்ச்செல்வனுக்கு வீர வணக்கம்..
பாலசிங்கத்திற்கு வீர வணக்கம்
முத்துக்குமாருக்கு வீர வணக்கம்..
வெட்கங்கெட்ட சோனியாவே
தமிழ் மக்களை கொல்லாதே..
வெட்கங்கெட்ட மத்திய அரசே
தமிழ் ஈழத்தை அழிக்காதே..”

இது கொஞ்சம்தான்.. இது போன்று ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு விதமாக கோஷங்களை எழுப்பியபடியே வந்தனர்.

ஊர்வலம் கொளத்தூர் பேப்பர் மில் ரோடு வழியாக செல்லத் துவங்கியது. சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூட்டம் நெருக்கியடித்தது. மனிதர்கள் நிற்காத இடங்களே இல்லை என்று சொல்லலாம். ஒரு மொட்டைமாடிகூட காலியாக இல்லை. அவ்வளவு கூட்டம்.

வடசென்னைவாசிகள் தங்களது வாழ்நாளில் இப்படியொரு ஊர்வலத்தை பார்த்திருக்கவே மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். ஊர்வலம் போய்க் கொண்டிருந்தபோதுதான் கடைகளில் மாட்டியிருந்த மாலைமலர் போஸ்டரில் நடிகர் நாகேஷ் மரணம் என்று போடப்பட்டிருக்க.. வந்திருந்த பொதுஜனம், நிகழ்ச்சி அமைப்பாளர்கள், மாணவர் அமைப்பு பிரதிநிதிகள் அனைவருக்குமே லேசான தொய்வு ஒன்று ஏற்பட்டது.

இன்றைக்காவது முத்துக்குமார் செய்தி தொலைக்காட்சியில் காட்டப்பட வாய்ப்புண்டு என்று நினைத்தால் நாகேஷின் மரணச் செய்தி அதற்கும் தடங்கலாகிவிட்டது என்று வருத்தப்பட்டார்கள். அவர்கள் வருத்தப்பட்டது போலவேதான் நடந்தது. ஆனாலும் மக்கள் டிவி இறுதி ஊர்வலத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய முன் வந்தது அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

அவ்வப்போது பதிவான டேப்புகளை அவசரம், அவசரமாக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் புண்ணியத்தில்தான் தமிழகத்து மக்கள் முத்துக்குமாரின் பிரியாவிடையை கண் குளிரப் பார்த்திருக்கிறார்கள். வாழ்க மக்கள் தொலைக்காட்சி.

ஊர்வலத்தில் கோஷங்களெல்லாம் அடித்தொண்டையிலிருந்து, உணர்ச்சி பொங்க ஒலித்துக் கொண்டிருந்தது. ஒருவர் ஓய்ந்த பின்பு மற்றொருவர் துவங்கினார். இதுவெல்லாம் காசு கொடுத்து வரவழைக்கப்படும் மாநிலக் கட்சிகளின் தொண்டர்களிடத்தில் நிச்சயமாக காண முடியாது. அப்படியொரு வெறி இருந்தது அவர்களுக்கு..

ஆனாலும் சில மாணவர் திலகங்கள் ரொம்பவே ஆட்டம் ஆடிவிட்டார்கள். கோஷம் போடுபவர்கள் பாட்டுக்கு கோஷம் எழுப்பிக் கொண்டிருக்க இந்தத் தம்பிமார்கள் தங்களது வேலையில் தீவிரமாக இறங்கினார்கள். முதல் அனர்த்தம் ஆரம்பித்தது கே1 செம்பியம் காவல் நிலையம் முன்பாக.

காவல் நிலைய வாசலின் நேர் முன்பாக இருந்த சுவற்றில் சோனியாகாந்தி, வாசன் இருவரின் முகங்கள் வரையப்பட்டிருந்தன. திடீரென்று ஒருவர் சோனியா ஓவியத்தின் அருகில் சென்று காறித் துப்பினார். இன்னொருவர் தன்னுடைய செருப்பை எடுத்து ஓவியத்தின் முகத்தில் மாறி மாறி அறைந்துவிட்டு வெற்றி நடை போட்டார். கூட்டம் ஆரவாரம் செய்ய உற்சாகமான இன்னொருவர் செய்ததுதான் கொடுமையின் உச்சக்கட்டம். சோனியா ஓவியத்தின் மேல் அவர் சிறுநீர் கழித்தது அருவருப்பு. ஊர்வலத்தில் கூடவே வந்து கொண்டிருந்த பெண் போலீஸார் இதைப் பார்த்துவிட்டு வாயைப் பொத்தி சிரித்தபடியே நடந்தார்கள்.

இதன் பின்பு அந்த சாலையில் வரையப்பட்டிருந்த அனைத்து சோனியா உருவங்களின் மீதும், வாசனின் உருவங்களின் மீது செருப்பு வீச்சுக்களும், காறித் துப்பல்களும், அபிஷேகங்களும் தொடர்ந்தன. பின்னால் இருந்து வந்தவர்கள் சிலர் அவர்களைத் தடுத்து நிறுத்தினாலும் ஒரு அளவுக்கு மேல் அவர்களாலும் முடியவில்லை.

இரண்டுபுற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா என்று கேட்கத் துவங்கினார்கள் சிலர். ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் வாசலில் குடம் நிறைய தண்ணீரை வைத்துக் கொண்டு நின்றிருந்த ஒரு மார்வாடிக்காரர்கள்தான் முதலில் நான் பார்த்த தண்ணீர் சேவைக்காரர்கள். இதன் பின்பு பல இடங்களிலும் இதே போன்று கூட்டத்தினருக்கு தண்ணீர் தரப்பட்டது.

முன் வரிசையில் சென்று கொண்டிருந்த இரும்புத் தொப்பி போலீஸாருக்கும் அவர்களுக்கு முன்பு நடந்து வந்து கொண்டிருந்தவர்களுக்கும் இடையே பெரும் போராட்டமே நடந்தது. இரும்புத் தொப்பி போலீஸாரை முன்னால் போகவிட்டுவிட்டு பெரும் இடைவெளிவிட்டு நடக்கத் துவங்கினார்கள் மாணவர்கள். பல முறை இவர்களால்தான் கூட்டம் நின்று, நின்று வரத் தொடங்கியது.

சீக்கிரமாக போய்விடலாம் என்று நினைத்து சிலர் கூட்டத்தை மிகச் சிரமப்பட்டு ஒழுங்குபடுத்தி போய்க் கொண்டிருந்தார்கள். ஊர்வலம் பெரம்பூர் திருப்பத்தை அடைந்தபோது அங்கே ரயில் பாலத்திற்கு செல்லும் பாதையை மூடிவைத்து போலீஸாரை குவித்து வைத்திருந்தார்கள். ஊர்வலத்தின் முகப்பு பகுதியில் வந்தவர்கள் அந்த வழியாகத்தான் செல்வோம் என்று கூச்சல் போட ஆரம்பித்து போலீஸின் சட்டையையே பிடித்துவிட்டார்கள்.

ஆனாலும் போலீஸார் அசரவில்லை. “அந்த வழியில் போனால் நிறைய இடங்களில் போக்குவரத்தை நிறுத்த வேண்டி வரும். அதோடு உங்களுக்கு நேரமும் அதிகமாகும்..” என்று சொல்லிப் பார்த்தார்கள். சிலர் அங்கேயே ரோட்டில் அமர்ந்துகொள்ள.. ஊர்வலம் அங்கேயே ஸ்தம்பித்தது.

பெரம்பூர் ரயில் பாலத்தில் புகுந்தால் அப்படியே பின்னி மில் வழியாக புரசைவாக்கம் நெடுஞ்சாலை சென்றுவிட்டால் மக்கள் கூட்டம் நிறைய இருக்கும். அதிக கவனஈர்ப்பு இருக்கும் என்பது ஊர்வலத்தினரின் கருத்து. போலீஸாரே “முடியாது” என்று ஒற்றை வரியில் உறுதியாக நின்றார்கள். சூழல் மோதலாக உருவெடுத்தபோது இடையில் நுழைந்த பண்ருட்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் வேல்முருகன் மிகப் பிரயத்தனப்பட்டு ஊர்வலத்தினரை அடக்கி “இப்ப சண்டை போட வேண்டாம்.. வாங்க.. வாங்க..” என்று சொல்லி பெரம்பூர் மெயின் ரோடு வழியாகவே திருப்பிவிட்டார். இவரும் இங்கே வந்திருக்காவிட்டால் நிலைமை அந்த இடத்தில் மோசமாகியிருக்கும்.

ஆனால் கூட்டத்தினரோ இந்தக் கோபத்தை வேறு வழியில் காட்டிவிட்டார்கள். வழியில் இருந்த சுவர்களில் வரையப்பட்டிருந்த சோனியாவின் உருவத்திலெல்லாம் பெயிண்ட் அடித்து முகத்தை அலங்கோலமாக்கிக் கொண்டே வந்தவர்கள் பெரம்பூர் ரயில்வே நிலையத்தின் வாசலில் தளபதியுடன் சிரித்தபடி இருந்த கலைஞரின் பேனரை பார்த்து ஆவேசப்பட்டார்கள்.

நிமிடத்தில் பேனர் கிழித்து எறியப்பட்டது. தடுக்கப் பாய்ந்த போலீஸாருடன் மல்லுக் கட்டினார்கள் மாணவர்கள். முடியாமல் போலீஸார் ஒதுங்கிக் கொள்ள.. அப்போது ஆரம்பித்து அந்த சாலையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து தி.மு.க., அ.தி.மு.க. பேனர்களும் கிழித்து எறியப்பட்டன. அங்கிருந்து வியாசர்பாடிவரையில் இருந்த அனைத்து தி.மு.க. கொடிக்கம்பங்களும் நொடியில் வெட்டி வீழ்த்தப்பட்டன.

ஜெயலலிதாவின் பேனரைக் கிழித்து நடு ரோட்டில் போட்டு எரித்து சொக்கப்பானை கொழுத்தினார்கள். அடுத்து கலைஞரின் பேனரும், புரசைவாக்கம் எம்.எல்.ஏ.பாபுவின் பேனரும்தான் அதிகமாக கிழித்தெறியப்பட்டது. ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி சேகர்பாபு வைத்திருந்த போர்டையே உடைத்து எரிந்தார்கள் சிலர். அதோடு ஜெயலலிதாவின் பேனரை காலில் போட்டு மிதித்து தங்களது கோபத்தைக் காட்டினார்கள்.

யாராலும் தடுக்க முடியாத அளவுக்கு இந்தச் சூழல் போய்க் கொண்டிருக்க பின்புறமோ போலீஸாருக்கு சோதனையைக் கொடுக்கும்விதமாக ஒவ்வொரு அமைப்பும் மிக, மிக வெதுவாக நடக்கத் துவங்கியிருந்தார்கள்.

அனைத்து அமைப்புகளும் தத்தமது பேனர்களைக் கொண்டு வந்திருக்க தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கொண்டுவரவில்லை. இதனை லேட்டாக உணர்ந்த சேரன் வேனில் வந்து கொண்டிருந்த அமீருக்குத் தகவல் சொல்லி அவரை வரவழைத்து, கூடவே ‘கற்றது தமிழ்' ராமையும் சேர்த்துக் கொண்டு இயக்குநர்கள் அணியாக வரத் துவங்கினார்கள்.

வைகோவும், திருமாவும் ஒன்றாக ஓரிடத்தில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்பாக மட்டும் அதிகமாக கோஷம் போடாமல் அமைதியாக போய்க் கொண்டிருந்தது ஊர்வலம்.

பெரம்பூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தைத் தாண்டி ரோட்டின் இடது புறம் சில பெண்கள் கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடியே நின்றிருந்தது ஆச்சரியமாக இருந்தது. இதனைவிட ஆச்சரியம் வியாசர்பாடி குடிசைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இப்படியொரு கோலத்தில் நின்றிருந்ததுதான்.

ஊர்வலத்திற்கு முன்புறமாக முத்துக்குமாரின் சவ ஊர்வலம் வருவதைச் சொல்லி அவருடைய புகழ் பாடியபடியே சென்று கொண்டிருந்தன இரண்டு ஆட்டோக்கள். நான் பார்த்து எந்த இடத்திலும் மக்கள் கூட்டம் இல்லாமல் இல்லை. பெரம்பூர் ரயில்வே டிராக் அருகேகூட திரளான மக்கள் கூட்டம் நின்றிருந்தது. வியாசர்பாடி பாலத்தின் அருகேயும் பொதுமக்கள் அந்தப் பாலத்தின் மீது கையில் மெழுகுவர்த்தியோடு நின்றிருந்து தங்களது அஞ்சலியைச் செலுத்தினார்கள்.

அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்க பலரும் கால்நடையாக போய்க் கொண்டிருந்தார்கள். எனக்கும் பாவமாக இருந்தது. தற்செயலாக நான் அங்கே சந்தித்த, கேமிராவும் கையுமாக, கடமையே கண்ணாக இருந்த நமது சக வலைப்பதிவர் பிரின்சு.என்.ஆர்.சாமாவிடம் இது பற்றிச் சொன்னேன். “ஈழத்துல முப்பது வருஷமா கரண்ட்டையே பார்க்காம வாழ்ந்துட்டிருக்காங்க.. மரத்தடில குடும்பம் நடத்திக்கிட்டிருக்கான்.. அதெல்லாம் உங்களுக்கு கஷ்டமா தெரியலையா..? ஒரு நாள் நடக்கட்டுமே.. என்ன குறைஞ்சு போச்சு..?” என்று அடிக்க வருவதைப் போல் பேச.. “ஐயா சாமி.. ஆளைவிடு..” என்று எஸ்கேப்பானேன்..

பேசின்பிரிட்ஜ் பாலத்தின் அந்தப் புறமிருந்து மக்கள் கூட்டம் போக்குவரத்து இல்லாததால் கால்நடையாகவே வியாசர்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

வியாசர்பாடி அருகே வந்தபோதுதான் ஒரு திடுக்கிடும் செய்தி ஊர்வலத்தினருக்குக் கிடைத்தது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து, விடுதிகளை மூடச் சொல்லி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று.

இதைக் கேள்விப்பட்ட கூட்டத்தினரின் கோஷம் இன்னமும் ஆக்ரோஷமாக எழும்பியது. ‘அங்கே', ‘இங்கே' என்று செல்போன் பேச்சுக்கள் பரிமாறிய பின்பு பேசின்பிரிட்ஜ் பாலத்தின் அருகே வந்தபோது கூட்டம் அங்கேயே அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தை நடத்தியது.

“அரசு அறிவித்த கல்லூரி மூடல் உத்தரவை வாபஸ் வாங்க வேண்டும். அதுவரையில் நாங்கள் நகர மாட்டோம்..” என்று அறிவித்தனர் கூட்டத்தினர். போலீஸார் தங்களால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட தலைவர்கள்தான் பஞ்சாயத்துக்கு வந்தார்கள்.. “அரசின் உத்தரவை இந்த நேரத்தில் எதிர்ப்பது விவேகமல்ல. இது மக்களை இப்போதைக்கு துன்புறுத்தும். ஏற்கெனவே இந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நாம் உடலை அடக்கம் செய்துவிட்டு பின்பு பேசுவோம்..” என்று ஒருவாறாகச் சொல்லி சமாதானப்படுத்த.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்துதான் மீண்டும் ஊர்வலம் துவங்கியது..

மூலக்கொத்தளம் சுடுகாடு வண்ணாரப்பேட்டை மெயின் ரோட்டில் தங்கசாலைக்கு திரும்புமிடத்தில் நேரான பாதையில் இருக்கிறது. இது ஒருவகையில் தமிழ் வரலாற்றில் மிக முக்கியமான இருப்பிடம். 1965-ல் பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்தபோது தி.மு.க. நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்விட்ட தாளமுத்து நடராசன் எரியூட்டப்பட்ட சுடுகாடு இதுதான். இதே சுடுகாட்டின் ஒரு மூலையில் தாளமுத்து நடராசனுக்காக ஒரு நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு காரணத்துக்காகவே கொளத்தூரின் அருகேயிருந்த மக்காராம் தோட்டம், வில்லிவாக்கம், ரெட்ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்த சுடுகாடுகளைத் தவிர்த்துவிட்டு “15 கிலோ மீட்டர் என்றாலும் பரவாயில்லை. மூலக்கொத்தளம் சுடுகாடுதான் பொருத்தம்” என்று நினைத்து இங்கே கொண்டு வந்தார்களாம்.

நான்கு நாட்களுக்கு முன்புதான் தாளமுத்து நடராசனின் நினைவு தினம் வந்தது. அன்றைக்கு அமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்து தாளமுத்து நடராசன் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தியதால் ரோட்டோரம் இரு புறத்தையும் சுத்தம் செய்து வைத்திருந்தார்கள். அங்கே ஏற்கெனவே மேடையும், சேர்களும் போட்டு அனைத்தும் தயாராக இருந்தது.

ஊர்வலம் சரியாக இரவு 11.10 மணிக்கு, கிட்டத்தட்ட ஏழரை மணி நேரம் கழித்து சுடுகாட்டிற்குள் வந்தடைந்தது. ‘வீர வணக்கம்..' ‘வீர வணக்கம்..' என்று முழக்கமிட்டபடியே இருந்த கூட்டத்தைப் பார்த்து தலைவர்கள் திண்டாடிப் போனார்கள். நாம் என்ன சொன்னாலும் எதுவும் நடக்காது என்று நினைத்தவர்கள் அங்கேயே முத்துக்குமாருக்கு வழியனுப்பிவிட்டு அவர்கள் மேடைக்குப் போய் சேர்ந்தார்கள்.

தலைவர்கள் சென்ற பின்பு வேனில் இருந்து முத்துக்குமாரின் உடல் இறக்கப்பட்டது. பின்பு முத்துக்குமாரின் மைத்துனர் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவரப்பட்டு அவரும் சேர்ந்து கைகொடுக்க உடலை தூக்கி தயாராக இருந்த சிதையில் வைத்தார்கள். எருவாட்டிகளை அடுக்குவதற்குக்கூட மாணவர்களுக்கிடையில் போட்டா போட்டி நடந்தது. இந்த இடத்தில் படம் பிடிக்க முடியாமல் டிவிக்காரர்கள் தவியாய் தவித்துப் போனார்கள். உள்ளே ஒரு இடம் விடாமல் மாணவர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

ஒரு பெரும் போராட்டத்திற்குப் பின்பே முத்துக்குமாரின் தந்தை சிதைக்கு தீ மூட்டினார்.. ‘வீர வணக்கம்' கோஷம் எல்லை தாண்டியது. தீ எரிய, எரிய ஒவ்வொரு அமைப்பினரும் மாறி மாறி வந்து நின்று கொண்டு ‘வீர வணக்கம்' என்று கோஷமிட்டார்கள்.

சிதைக்குத் தீ வைக்கப்பட்டதை மேடையிலிருந்தே தெளிவாக பார்க்க முடிந்தது. இதன் பின்பே திருமாளவன் பேசத் துவங்கினார். சாடை மாடையாக கலைஞரை கண்டித்தவர், “நமக்கு நல்லது செய்வதற்காகத்தான் இந்த அரசு கல்லூரிகளை மூடியிருக்கிறது. பரவாயில்லை. நமக்கும் நல்லதுதான். கல்லூரி இருந்தால்தானே புறக்கணிக்க.. இப்போது அவர்களே மூடிவிட்டார்களே.. சந்தோஷம்..” என்றார்.

வைகோ பேசும்போது தாளமுத்துநடராசனை நினைவு கூர்ந்தார். “மாணவர்களின் போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது நமது மாநில அரசு” என்றார். “இது போன்று மாணவர்கள் மூலமாகப் போராட்டம் நடத்தி, அதன் மூலம் ஓட்டுக்களை வாங்கி ஆட்சியைப் பிடித்துதானே இன்றைக்கு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறீர்கள். ஆட்சிக்கு வந்த பின்பு உங்களுக்கு இப்போது இந்த மாணவர்களின் எழுச்சி ஆபத்தாக இருக்கிறதா..?” என்று கேள்வி எழுப்பினார். ஈழத்து கவிஞர் ஒருவரின் கவிதையை வாசித்துக் காட்டினார். கடைசியில் “பிரபாகரனை நெருங்கவே முடியாது.. விடுதலைப்புலிகளை அழிக்கவும் முடியாது..” என்றார் திட்டவட்டமாக.

இதன் பின்பு நல்லகண்ணு, எம்.நடராசனும் பேசினார்கள். ராமதாஸ் வரவில்லை. ஆனால் அவருக்குப் பதிலாக ஜி.கே.மணி பேசினார். த.வெள்ளையன் இந்த மூன்று நாட்களும் தங்களுக்கு ஒத்துழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கடைசியாக பழ.நெடுமாறன் பேசும்போது, “நாம் ஒவ்வொரு படியாக செல்வோம். முதலில் பிப்ரவரி 4-ம் தேதி முழு அடைப்பு. அந்த அடைப்பு வெற்றி பெற்றாக வேண்டும். அதன்பின் பிப்ரவரி 7-ம் தேதியன்று அடுத்தக் கட்ட போராட்டம் பற்றி பேசி முடிவெடுப்போம்” என்றார். கூடவே, “ஊர்வலத்தில் வந்ததைப் போலவே திரும்பிப் போகும்போதும் எவ்வித சச்சரவுமில்லாமல், கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து பத்திரமாக நீங்கள் திரும்பிப் போக வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.

இந்த மூன்று நாட்களும் நான் பார்த்தவரையில் எப்போதுமே உணர்ச்சிவசப்பட்டு பேசும் வைகோவும், திருமாவளவனும் இந்த விஷயத்தில் மட்டும் தங்களது சுருதியை சற்றுக் குறைத்துக் கொண்டார்கள். உணர்ச்சிவேகத்தில் பேசப் போய் மாணவர்கள் கிளர்ந்து ஏதாவது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டால் பொதுஜனங்களின் மத்தியில் ஈழப் போராட்டத்திற்கான ஆதரவு குறைந்துவிடும் என்ற எண்ணவோட்டம் அவர்கள் மத்தியில் இருந்ததுதான் இதற்குக் காரணம்.

நிச்சயம் இது பாராட்டத்தக்கது. வந்த கூட்டம் மிக அமைதியாக திரும்பிச் சென்றது எவ்வித சலசலப்புமில்லாமல்.. அதேபோல் மாணவர்கள் எவ்வளவோ பிரச்சினைகள் கொடுத்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு கடைசிவரையிலும் முழு பாதுகாப்பு வழங்கி அமைதியை நிலைநாட்டிய காவல்துறையினரையும் பாராட்டித்தான் ஆக வேண்டும். அம்மா ஆட்சி மட்டும் இப்போது இருந்திருந்தால் ‘ஏதோ ஒன்று' நிச்சயம் நடந்திருக்கும். காவல்துறையின் பொறுமைக்கு ஒரு ‘ஜே!'

ஊர்வலம் வந்த சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்களெல்லாம் ஊர்வலத்தில் தாமாகவே வந்து கலந்து கொள்ள.. கடைசியாக கிட்டத்தட்ட 20000 பேராவது வந்திருப்பார்கள் என்று நான் ஊகிக்கிறேன்.

முத்துக்குமார் என்ன காரணத்திற்காக தீக்குளித்தாரோ அதில் கால்வாசி இந்த மூன்று நாட்களில் நடந்தேறிவிட்டதை வழிநெடுகிலும் கூடியிருந்த மக்கள் கூட்டமே காட்டிவிட்டது. இப்போது ஈழத்து மக்களின் துயரம் தமிழகத்து மக்களின் வீட்டுக்குள் பேசப்படும் பேச்சாக இருக்கிறது. விரைவில் அது மாணவர்கள் வாயிலாக வெளிப்படும் என்று நினைக்கிறேன்.

ஊடகங்களின் புறக்கணிப்பு, முக்கியக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் ஒத்துழையாமை இவற்றால்தான் முத்துக்குமாரின் இந்த முயற்சி சற்று தேங்கியதாக நான் நினைக்கிறேன். கலைஞரை சுட்டிக் காட்டிய அதே விரல்கள் அடுத்து தைலாபுரத்துக்காரரையும் சுட்டிக் காட்டும் என்பதால்தான் பாட்டாளி மக்கள் கட்சியினர் அதிக அளவில் இதில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்து இந்த முயற்சிக்கு பின்னடைவை தந்துவிட்டது.

முத்துக்குமாரின் துண்டறிக்கையே இந்த கொதிப்பான சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அந்தப் பேனாவின் வலிமையை என்னவென்று சொல்வது..?

முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கங்கள்..!

நன்றி உண்மைத் தமிழன்

முத்துக்குமரனின் இறுதி ஊர்வலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் எழுச்சிமிகு கோஷங்கள்….

பகுதி -1


பகுதி -2



பகுதி -3

மாவீரன் முத்துகுமாரின் இறுதி பயணம்

பகுதி -1



பகுதி -2



பகுதி -3

மாவீரன் முத்துகுமாரின் இறுதி சாசனம் - ஆடியோ

பகுதி -1




பகுதி -2



பகுதி -3

சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

மனதை மயக்கும் பழையபாடல்